- ஸ்டேசன்காரர்
ஒடும் ரயில்களை வெறித்துப் பார்த்தபடி
அவன் நாட்கள் நகர்கிறது
எப்பொழுதாவது குழந்தைகள் கையசைத்து செல்கையில்
இவனும் குதூகலித்தப்படி இரண்டு கைகளையும்
சேர்த்து அசைப்பான்
ரயிலைப் பிடிக்க ஓடுபவர்களோடு
இவனும் கண்களால் ஓடி மூச்சிரைப்பான்
வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீரை
இவன் கண்களின் வழியாகத் துடைத்துக்கொள்வான்
எந்த வண்டி எந்த பிளாட்பாரத்தில் வருமென
இவனுக்கு அத்துப்படி
தன்னிடம் யாரேனும் வந்து
விவரம் கேட்டுவிட மாட்டார்களா எனத் தவிப்பான்
வெளிப்புறத்தில் அழுக்காக இருக்கும் இவனை
பிச்சைக்காரன் என எளிதாக சொல்லிவிடுகிறார்கள்
இவனோ
தான் ஸ்டேசன்காரன் என்ற பெருமையில்
மனிதர்கள் நிரம்பிய ஒவ்வொரு ரயிலையும்
பெருந்தன்மையோடு
கையசைத்து வழிவிட்டுக்கொண்டிருக்கிறான்..
- துணையென நின்ற சங்குப்பூ
அந்த சிறு மரநிழலில்
மற்ற வண்டிகளும்
அவளின் இருசக்கர வாகனத்தை ஒட்டியபடி
நான்குபுறமும் வழி மறைத்து சொருகப்பட்டிருந்தன
அடைப்பட்டிருக்கும் வாகனத்தை
ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தவளின்
காத்திருப்பு நிமிடங்கள்
நீண்டுக்கொண்டிருந்தன
இன்னும் இருகைகள் கிடைத்தால் நகர்த்தி விடலாம்
யாருமற்ற அந்நேரத்தில்
நீளப்போகும் கைகளுக்காக காத்திருக்கும்
அவள் மனதின் பதைபதைப்பை குறைக்க
அம்மரத்தின் சங்குப் பூவொன்று
தன்னை உதிர்த்துக் கொண்டு
அவளுக்கு துணையாய்
அவளது வாகனத்தைக் காத்துக்கொண்டிருந்தது…
உணர்வுப்பூர்வமான கவிதை உணர்வுப்பூர்வமான குரலில்..💞💞💞