இந்தப் பனிக்காலத்து
நீண்ட இரவுகள்,
ஓயாத தூறலில் கத்தும்
மழைக்குருவி்யாய் உன் நினைவுகளில்
குளிர் காயாமல் உறங்குவதில்லை.
இரு- பத்து ஆண்டுகளுக்கு முந்திய
உன் தோரணை
அப்பிக் கொண்ட மனம்
என்னோடு இன்னும் ஈரமாய்…
“அசர்” வெய்யில் குவியும்
குசினி யன்னல்.
சுவரோரமாய் பலகைக் குற்றி.
அதில் நீயும் உன் தேநீர்க் கோப்பையும்.
தேநீரில் பிய்த்துப் போட்ட சில
ரொட்டித்துண்டுகளும்.
“என் உம்மாவுக்கு இது மிகவும் பிடிக்கும்”
அனாயாசமாய் ஒரு புன்னகை.
அதற்குள் பல கதைகள்
சொல்லாமலே ருசிக்கப்படும்.
ஏக்கங்கள்
எப்போதும்
எடுத்துப் பார்க்க நேரமில்லா
கிடப்பில்.
உனக்குப் பிடித்த
நிறம் கூட யாருக்கும் தெரியாது.
ஆனால் உனக்குத் தெரியும்
உன் நிறம்
பலருக்குப் பிடிக்காதென்று.
முன் வாசலுக்கும் விறாந்தைக்கும் இடைப்பட்ட தூரத்தில்
உன் செருப்புச் சத்தம்.
காத்திருப்பதும்,
கடைசியாய் சாப்பிடுவதுமாய்
கடந்த நாட்கள்.
இடையறாத
ஈனச் சுவரங்களை எல்லாம்
நிசப்த அலைவரிசைக்குள்
கடந்தாயோ? கதறினாயோ?
உன் குரலாக முடியாமல் போன
பச்சாதாபம்
முகட்டில் படிந்த உறை பனியாய்
இன்றும் எனக்குள்
கரைவதும் மீண்டும் உறைவதுமாய்..
முகவரி தொலைத்த
உன் வாழ்தலும்,
சுயம் மறந்த தேடலும்
தேநீரில்
நனைந்து, ஊறி
உருமாறிய ரொட்டித் துண்டுகளாய்.
‘அசர்’- முன் அந்தி நேரம்
‘உம்மா’ – தாயைக்குறிக்கும் இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் சொல்.
விறாந்தை- veranda ,தாழ்வாரம்