- முட்கிரீடம்
உதிர்ந்து கிடக்கும் இறகுகள்
சேகரித்து உனக்காய் ஒரு
கிரீடம் செய்தேன்.
நீ பிறந்த நாளுக்காய் காத்திருந்து
உன்னை தேவதையாக்கி
கிரீடம் சூட்டிய நொடியில்
பறவைகளைக் காயப்படுத்திய
கயவன் என்றொரு புதுப்பட்டத்தை
வாளால் செதுக்கித்தருகிறாய்
பரிசென வாங்கிக் கொள்கிறேன்
அம்முட்கிரீடத்தை!
கயவர்கள் காதலிப்பதில்லையா?!
- மெதுவாய் ஒரு மரணம்
கண்திறவா பூனைக்குட்டி
பிழைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை
தகர்ந்த நாளினில்
எறும்புகளின் அணிவகுப்பு துவங்கியதையும்
தன் கடைசி மூச்சு எதுவென
அறியாத சிற்றுயிர் கொஞ்சம் கொஞ்சமாக
மரித்துக்கொண்டிருப்பதையும்
எதுவும் செய்யாமல், ஆம் எதுவுமே செய்யாமல்..
வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர,
ஒரு சொட்டு கண்ணீரை வடித்து
மெதுவாய் ஒரு மரணத்தைக் கடந்தேன்…
ஏனோ கிடையில் கிடந்து மரித்துப்போன பெரியாச்சி
அன்று கனவினில் தோன்றி மீண்டும் மரித்தாள்…
எதுவும் எழுதாத நாட்குறிப்பின்
பக்கங்களை நிரப்புவதற்கு
நாள் முடியும் முன் உன்னைத் தேடுகிறேன்..
நீயோ என் பேனா மையைச் சேமித்து மறைகிறாய்..
காணாமல் போன ஆட்டுக்குட்டி
மறந்தே போன பின்நாளில்
திடீரென வீடடைவதைப் போல
எதுவுமற்ற ஒருநாளில் என்னைத் தேடுகிறாய்…
அத்தனையும் ஒதுக்கி வைத்து
உனக்காக என் செவிகளைத் தருகிறேன்…
நீ பேசு நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
எழுதப்படாமல் கிடக்கும் நாட்குறிப்பை
உன்னோடு பகிர்வதில் எந்த
சுணக்கமுமில்லை எனக்கு!
- மறக்கும் சாவிகள்
பூட்டிய வீட்டிற்குள்
பொக்கிஷம் இருக்கிறது
எடுத்துக்கொள் என்கிறாய்!
திகைத்து, தட்டிச் சோர்கையில்
சாவி உன்னிடம் தானே இருக்கிறது
என்று புன்சிரிப்புடன் கடக்கிறாய்…
உள்ளங்கையில் சிரிக்கும் சாவியை
ஏன் மறந்தேன் என்ற விடைக்கு,
புரிபடாத பதிலில்
இந்தப்பொழுது இங்கேயே நின்று போகிறது
மறந்து போகும் சாவிகளை எப்படி ஞாபகத்தில் வைப்பேன்?..
Art Courtesy : saatchiart.com