- மீன்கள் மேயும் விரலிடுக்கு
எங்கோ ஆழத்தில் பிரபஞ்ச தவிப்புடன்
முகிழும் அன்பின் மையம்
கருக்கொண்டிருப்பது ஒரு கேலக்ஸியை
முன்னும் பின்னுமாக அசையும் மனதை
உரசி பறக்கிறது
காலமெனும் விண்மீன்
புதிய வனங்களை உற்பத்தி செய்திட சிறகசைத்து
துடிக்கத் துடிக்க உதிரும் மகரந்த தூள்களில்
மருத மரங்கள் கிளை நீட்டும் நதியோர மணலில்
குறுகுறுவென பூத்துவிடுகிறது
நாணம்
ஈர்ப்புடன் தொடும் தருணங்களை சிலிர்த்திடச் செய்ய
போதுமானதாயில்லை
ஐம்புலன்கள்
- கையருகே எரிதழல்
தனிமைக்குள்ளிருந்து நீங்கிடத் தயங்கும் சொற்கூட்டங்கள்
தம் நிறமழிந்து மௌனிக்கின்றன
விரல்முனை தவிப்பில் குலையும் நினைவடுக்கின்
சிறு கதவு
மூடிக்கொள்ளும்போது
காத்திருக்கத்தான் வேண்டியதாகிறது
என் இருள் தின்ன மூச்சுத்திணறும் ஒரு டிராகனுக்காக
உணர்வுக்குரிய இச்சைகள் புதிய வாக்குறுதிகளை
இழக்கும்போதெல்லாம்
முதுகில் நெளியும் டாட்டூவாகிறது
காமம்
- இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும்..
பரஸ்பரம் நம்மிடையே ஆயிரம் வாதங்கள்
புரிந்துவிட்ட நிலையில்
புதிதாக சலித்துக்கொள்ள ஒன்றுமில்லை
பற்றிக்கொண்ட கைகளை உதறிக்கொள்வதற்கான
நற்காரணங்களை பத்திரப்படுத்தி
வந்திருக்கிறோம்
மீள் உருவாக்கம் என்கிற பேச்சுக்கு இடமில்லை
என்றாகிவிட்ட பிறகு
தவிப்பின் கிளையில் அமர்ந்து காகங்கள் கரைவது
சரியல்ல
குயில் பாடுவதற்கான பிரபஞ்சத்தை
அடைகாத்திட சமைக்கும் கூடு
மௌனம்தான்
- நுனி முடிச்சு
நான் அப்போதும் அங்கிருந்தேன்
ஒவ்வொரு வருகையின்போது மிச்சமாகும் நொடிகளாக
காத்திருந்தேன்
கண்ணாடி ஜன்னல் வழியே பாய்ந்து
தரையில் வீழ்ந்து கிடக்கும் வெயிலின் சடலத்தின் மீது
நின்றிருந்தேன்
ஹால் நெடுக அத்தனை வரிசைகளிலும்
மனிதத் தலைகள் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்த
உரையின் வீச்சில் நானிருந்தேன்
தாமதமாக அர்த்தம் இழக்கும் சொற்களின் தயவை வேண்டி
பரபரத்த மூளையின் மடிப்பில்
ரத்தக் கசிவென பரவிக் கொண்டிருந்தேன்
அசௌகரிய நிமிடங்களின் இதயத் துடிப்பில்
நாளங்களின் பாதைகள் குழம்பிடும் பயணமாகி
கொழுப்புக் கசடுகளாக
நீக்கமற நிரம்பியிருக்கிறேன்
ஓர் இறுக்கத்தின் குரல்வளையில்
புடைத்துக்கொண்டு உடைய வேண்டியது
நான் மட்டுமல்ல
நீயும்தான்