1
நகரும் கண்டத்திட்டுக்களைப்
பற்றி வந்து
பனிமலையின் ஆழ் மௌனத்தில்
கிடக்கிறது
ஒரு ஆழிச் சங்கு
உயிரேதுமற்ற
அந்தக் கூட்டுக்குள்
மென்படலமாய் உருள்கிறது
எங்கோ இணைந்துகொண்ட
ஒரு ஆற்றின் பாடல்
வார்த்தைகளை மறந்துவிட்ட சங்கின்
மௌனக் கேவல்கள்
அலையலையாய் அலைகின்றன
யாரும்
கால் நனைக்காத கரையில்.
2
பொய்யென்று தெரிந்தேதான் அழுதாள்
தெரிந்தேதான்
அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்
அவன் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள்
ஒரேயொரு கணம்
அந்தப் பொய்யை
மெய்யை
மறக்கச்செய்யும் முத்தத்தை
அவள் மீது போர்த்தினான்
போதும்
அதுவரை அறிந்திடாத
அந்தத் தீயில்
அதற்காக மட்டுமே இறங்கினாள்.
3
நான் காணாத தூரத்தில்
நீ உதிர்த்த புன்னகை
என் ஜன்னலுக்கு வெளியே
மினுக் மினுக்கெனப் பறந்துகொண்டிருக்கிறது
யாருமற்ற ஏரியின் நடுவே
காற்றுக்கு நகர்ந்துகொண்டிருக்கும் படகாக
உன்னறையில்
ஒலிக்கிறது
ஒரு பாடல்
அந்தரத்தின் ஆழத்து நட்சத்திரங்களுடன்
நீந்திக் கொண்டிருக்கிறாய்
நீ
உன் புத்தகத்தின் எழுத்துகள்
புரண்டு புரண்டு
உருவாகும் சித்திரத்தில் ஒரு முகம்
இரவு விளக்கின் ஒளியை மென்று
உன் உதடுகளில் ஊட்டிவிடுகிறது
எங்கோ தொலைவில் ஒலிக்கும்
மெல்லிசையாக நீ மிதக்க
நீண்ட கம்பிகளை
ஜன்னலில் கொண்ட என் அறை
கிடாராக உருமாறுகிறது.
Courtesy : Digital Illustration By Ranita Basu