- இசைக் குறிப்புகள்
பின்னிரவில் பரவிய தீயென
காக்கைகள் கழுகுகள் பேசிக்கொண்டன
சாம்பல் காட்டிலிருந்து
பிழைத்த விழிகளால் கடவுளுக்கு
மழைவேண்டி
கடிதம் எழுதிய சிறுமியை
முதலில் வார்த்தைகள் கைவிட்டன
காடுகள் கைவிட்டன
நதிகள் கைவிட்டன
சிறிய கோடுகளால்
துக்கத்தினை அளவீடு செய்து
இசைக்குறிப்பை தொடங்குகிறாள்
தொண்டைக் குழியின் வளைவுகளை
நுணுக்கமாக எழுதுகிறாள்
ஒரு மச்சத்தில் முடியும் குறிப்போடு
பூர்த்தி செய்துவைத்தாள்
கடவுளுக்குத் தர வேண்டும்
இடையே குறுக்கீடுகள் இன்றி
என்ன செய்வது
கடவுளின் முகவரியை
அவள் அறிந்திருக்கவில்லை
வான் நோக்கி பேசும் பறவையைத் தொடர்ந்து
உயரத்திலிருந்து உச்சத்தைத் தொட
மலையேறிச் சென்றவள்
மலையிலிருந்து வீசுகிறாள்
அவை
திசைகளைக் கடந்து வாழும்
விசுவாசமான பறவைகளாகப் பறக்கின்றன
சிறுமி
மீச்சிறு மலையாகக் காத்திருக்கிறாள்.
- சர்ப்பவாசம்
நடை சாத்தப்பட்ட ஆலயத்திலிருந்து
இறுதியாக வெளியேறத் துடிக்கும் காற்று
எண்ணெய் பிசுக்கோடு எரியும் விளக்கின் ஒளியை
அணைக்க மறுத்து மறுதலித்து
தயக்கம் கொள்கிறது
ஒளியின் மீச்சிறு நிழலில்
ஒட்டிக்கொண்ட கறுமையிலிருந்து
பிள்ளையின் கண்களுக்குத் தீட்ட
மை எடுத்துச் சென்ற பெண்ணின்
உச்சி வகிட்டிலிருந்து வியர்வை வழிந்து
ஓடை பெருகியது
தடித்த கதவுகளின் வழியாக
ஆட்டுக்குட்டியைத் தேடும் மேய்ப்பனின் சப்தம்
ஆலயச் சுவர்களில் மோதி எதிரொலிக்கிறது
சர்ப்பம் தீண்டி
நீலம் பாரித்துக்கிடக்கும் ஆட்டுக்குட்டிக்கு
குரலென்பது தேயும் சலங்கையொலி
பின்னிரவைக் கடந்து செல்லும்
கைசேதக் கர்மாக்களின்
பிரார்த்தனை குரல் உருகியுருகி
சாவித் துவாரத்தின் வாயிலாக நுழைகையில்
திடுக்கிட்டு எழுந்தது ஓர் அறம்
புலர்வதற்கு முன்
ஆலயமெங்கும் சர்ப்பவாசனை
சர்ப்பம் முழுக்க
சந்தர்ப்ப வாசனை.
- மகோன்னதம்
ஆழிக்குள் நீந்தும் பிடி
தன் சினைக்குள் நீந்தும்
துடியடிக்கு செய்யும்
மூத்த உபதேசம்
”அளவில் பெரிய உலகின் வழி
மீச்சிறு துளிகளெனக் காண்”
அசைந்தாடும் நாவாய்
தனது துருவேறிய அடிப்பாகத்தால்
கீறிச் செல்கிறது
தடித்ததோல்க் கீறி துளிர்க்கும்
ரத்தத்தைச் சுவைக்கும்
மீன் குஞ்சுகள்
“துளிகளே உலகம்” எனப் பாடிச்செல்கிறது.
Art Courtesy : Marci
சிறப்பான வரிகள்
ரேவாவின் உச்சரிப்பு கவிதைகளுக்கு உயிரூட்டுகிறது
மிக்க அன்பு தோழர் 💐