- இருள் சூழ்க
முன்பொரு பாடல் இருந்தது.
அதைக் காற்றினில் பரவ விட்டேன்.
பின்னொரு தீண்டல் இருந்தது.
பிராணிகளுக்கு
அளித்து வளர்த்தேன்.
பிந்திய காலத்தின் கனவை
பகல் தன் சோம்பலை முறித்து எழும்முன்
மறந்து போனேன்.
ஒரு கடிதம், அதன் வரிகள், அதை எழுதிய பேனா
என அனைத்தையும்
அலை உமிழும் மணலின்
அடியில் விட்டுவிட்டு
வந்தேன்.
விடாது ஒட்டி வந்த உப்புக்கரிப்பை,
நரநரப்பைப் போக்க
இரண்டு டிஷ்யூக்கள்
போதுமானதாய் இருந்தன.
பரிசளித்த ஆடையை
முழுகிய பின்
திரும்பிப் பார்க்கக் கூடாத
குளத்தின் படிகளில்
நீங்கினேன்.
சொல்லிய வார்த்தைகளை,
பெற்றுக் கொண்ட
வாக்குறுதிகளை,
சாட்சியென நின்றிருந்த
வானத்தில் வீசியெறிந்தேன்.
ஒவ்வொன்றாய் மினுங்கும்
நட்சத்திரமாகி
இரவு முழுதும்
வெறிக்கிறது
என் கூரையில்.
படர்ந்த வேலி முழுதும்
தெறித்த சிவப்பில்
பூக்கும் மயில் மாணிக்கத்தின்
இலையைக்
காணும்போதெல்லாம்
இமைபீலியென
வர்ணித்த வரிகள்
வஞ்சிக்கின்றன.
வாதைக்கட்டிகள்
அடைந்த சிறுபொதிகள்
சுமக்கும் வாகனத்திற்கு
உயிரிருக்குமானால்
அது என் பெயரைச் சொல்லும்.
வாசனைத் திரவ புட்டியென
ஞாபகங்களைக்
கசியச் செய்யும்
காந்தலேறிய
கன்னத்தழும்புக்கு
சிகரெட் முனை
போதும்.
விண்ணேகும் வெகுமானத்திற்கு
காத்திருக்கும் வீண்பொழுதினில்
கண்திறக்கச் செய்யும்
வெளிச்சமாய் ஏன்
என் வாழ்வில் ஒளிர்கிறாய்?
- மீதமுள்ளது
ஒவ்வொன்றாக
கழிக்க வேண்டும்.
சில பாடல்கள்
சில புத்தகங்கள்.
கவிதைகள்.
திரைப்படங்கள்.
வெற்றுப்பாதம்
மண்ணில் படுமளவு…
மேனியில்
மணல் நரநரக்குமளவு
வெற்றிடமாகிவிடுவேன்.
அப்புறம் சில மனிதர்கள்
வாக்குறுதிகள்
வாசனைகள்
பூக்களின் ஈரம்
மஞ்சள் நிறம்
நாவின் ருசி.
அவ்வளவுதான்.
நான் முற்றிலும்
செயலிழந்து விடுவேன்.
இன்னும் கொஞ்சம்
குழந்தையின் ஸ்பரிசம்.
அம்மா மடி
ரயில் பயணம்.
காதோரக் குரல்.
முடிந்து விட்டது.
இனி வெள்ளைத்தாள்,
வெற்று சதைப்பிண்டம்.,
சப்ஜெக்ட்.
என்னவேனும் செய்யலாம்
அல்லது
ஆழப் புதைக்கலாம்.
- மஞ்சள் பூ.
ஒவ்வொரு நாளும்
இறப்பை
கற்பனை செய்து கொள்வேன்.
யாரிடமிருந்து அந்த செய்தி
பயணிக்கத் துவங்கும்
என்பதாக விரியும்.
சில கேள்விகள்.
யார் யாரெல்லாம்
நேரில் வரமுடியாது?
யாரால் சத்தமிட்டு
அழ முடியாது?
நேற்றுகூட பேசினேன் என
சொல்பவர்கள் எத்தனை பேர்.
தொடர்ந்து கொண்டிருந்ததில்
ஆட்கள் மாறிக்கொண்டே
இருக்கிறார்கள்.
இடமும்தான்.
போய்ச்சேரும் இடம் தெளிவு.
மஞ்சளாய் மறுநாளில்
ஒரு பூ பூக்கும்.
அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள்
சிறப்பு நட்பே. ஒலி வடிவம்… வரி வடிவம். வாழ்த்துகள்