ஒரு புன்னகையை ஏந்திக் கொண்டு
உலகினைச் சுற்றுகிறேன்.
பூத்திட்ட மலர்களைக் கண்டதும் இரட்டிப்பாகிறது.
மலையின் மேனியில் மேகத்தைக் கண்டு
குதியாட்டம் போடுகிறது.
இலைநுனியில் பனியெனக் கிடக்கும்
மழையைக் கண்டு
எண்ணச் சிறையில் இளைப்பாறுகிறது.
அன்னைத் தாலாட்டில் அயர்ந்துறங்கும்
மழலையைக் கொஞ்சி
ஆற்றலை நீட்டிக்கிறது..
ஒளிரும் சூரியனில் உற்சாகத்தை வாங்கிய பின்
சுழலும் பூமியைக் கண்டது.
விரைவுப் பயணத்தில்
சாலைகளை நிறைக்கும் வாகனங்களைக் கண்டு
அஞ்சத் தொடங்கியது புன்னகை.
காணும் உயிர்களிடத்தில்
கருணையை விதைத்து வந்த புன்னகை
உதட்டுக்குள் ஒளிந்து கொண்டது
கண்டும் காணாமல் கடந்து சென்ற
மனிதர்களைக் கண்டதும்.