- நீயொரு பந்தல்
ஒரு கிளையில் படரும்
சங்குப்பூ கொடியாய்
உன் மொத்தத்திலும்
படர்ந்து கிடக்கின்றேன்.
கொஞ்சமும் சிந்திக்காமல்
படக்படக்கென்று அகற்றி எறிகிறாய்.
மீண்டும் மீண்டும் படர்ந்து
அயர்ந்து விடுகிறேன்.
கொடியை அகற்றும் நீ
கொஞ்சம் கருணையோடு
வேரையும் அகற்றினால்தான் என்னவாம்?
- பச்சிளம் மனது
வேண்டாம் வேண்டாமென்று
பிடியிலிருந்து தப்பித்து ஓட முயலும்போது
இழுத்து வைத்து
இன்னும் ஒன்னே ஒன்னென
தான் உண்ணப்போவதை
மல்லுக்கட்டி ஊட்டிவிடும் அம்மாவாய்
அன்பைச் சொட்ட வேண்டும்
உங்கள் சொற்கள்.
சித்தியின் பாசாங்கு தடவிய
ரொட்டித் துண்டுக்கெல்லாம்
பணியவே பணியாது
இந்தப் பச்சிளம் மனது!
- அத்தியாவசியம்
உடம்பினில்
குருதியை உறிஞ்சும்
உண்ணிப் பூச்சியைப் பிய்த்து
வீசுவதுபோல
அக்கம் பக்கத்தினரும்
உற்றார் உறவினரும்
திமிரை நீக்கிவிடக் கோருகிறார்கள்.
தன் ஓட்டினுள்
எப்போது தலையை
உள்ளே மறைக்க வேண்டுமென்றும்
வெளியே நீட்ட வேண்டுமென்றும்
முடிவு செய்யும் ஆமையாய்
அவசியமான நேரங்களில்
அவசியமான இடங்களில்
அவசியமானவர்களிடம்
அவசியம்தான் என் திமிரென்றால்
தளும்புகிறது திமிர் என்கிறார்கள்.
- உன் ஞாபகங்களுக்கு நான்கு கால்கள்
உன்னை வேண்டாமென்று
ஒதுங்க ஒதுங்கத்தான்
ஒரு வேட்டை நாயைப் போல்
உன் ஞாபகங்கள் என்னைத் துரத்துகின்றன.
அதன் தீரா பசியைப் போக்க
திராணியின்றித் தவிக்கின்றேன்.
ஆங்காங்கே மூச்சிரைத்து நாவறண்டு
நிஜத்தின் நிழல் நாடுகிறேன்.
மற்றபடி பரந்த பாலையெனும்
ஞாபகங்களின் பாதையில்தான்
பதற்றமாய் நடக்க வேண்டியிருக்கிறது.
நீண்டு தொங்கும் நாக்கில்
எச்சில் வழிய வழிய
வெள்ளை முயலை ருசிக்கக்
காத்திருப்பதைப்போல
என் காலடியிலேயே வாலாட்டி நிற்கிறது
அந்தக் கொழுத்த வேட்டை நாய்!
* AI Generated art using in this post