- கனிமரம்
உயரம் கூடியதற்காய்
ஒடித்து வைத்தாய்
வேகம் காட்டியதற்காய்
வெட்டிவிட்டாய்
செழித்து வளர்ந்ததற்காய்
சிக்கனம் வலியுறுத்தினாய்
நிழலுக்கு முட்களை அணிவித்தாய்
இலைகளைத்திருடி ஊமையாக்கினாய்
நான் கனிமரமெனத் தெரிந்தே
தொட்டிக்கு மாற்றினாய்
இத்தனைக்குப் பிறகும்
பூத்த முதல் பூவை
உனக்கென பறித்துக்கொண்டாய்
வேறென்ன தெரியுமுனக்கு
- முத்தங்களால் நிரம்பிய வீடு
பிரியங்களின் மொழியை
முத்தங்களாகச் சேமித்திருக்கிறேன்
உன்னைப்பார்க்காத
உன்னிடம் பேசாத
உன்னுடன் சண்டையிட்ட
நீ பிரிய நேர்ந்த பொழுதுகளில்
ஒவ்வொன்றாய் சேர்த்தது
அன்றொருநாள்
கைகள் வழிய வழிய
ஊட்டியபோது
கசந்ததாய் துப்பிவிட்டாய்
அப்போதும் கூட முத்தமிட்டேன்
நீ கடந்தபிறகும் ஒட்டியிருந்த
உன் மணத்தில்
உறைந்த விழிகளில்
ஒழுகிக்கொண்டிருக்கும் உயிரோடு
இப்பொழுதும் என்னால்
பிரியத்தை மொழியாக்க முடியாது
இறுதி முத்தத்தை
உதடுகளில் ஒட்டியிருக்கிறேன்
வரும்வழியில் கால்வைத்தால் இடறிவிழுமளவு
முத்தங்களால்
நிரம்பியிருக்கிறது வீடு
எடுத்துக்கொள்வதும்
உதறிவிடுவதும்
இப்போதும் உன் விருப்பம்