ஒரு எதிர்–கவிதையைத் தேடி 17 செயற்கை நுண்ணறிவுத் தூண்டல் சொற்றொடர்கள்*
(அல்லது)
‘ஏ.ஐ.’ எழுதிய உதிர்–கவிதை
(அல்லது)
பூதக் கண்ணாடியின் மேல் விழும் நிலவொளி
* 17 AI prompts in search of an anti-poem
தலைப்பு உபயம்: எரிக்கா ஜாங் – ஒரு பெண்ணியக் கவிதையைத் தேடி 17 முன்னெச்சரிக்கைகள் – Erica Jong – 17 warnings in search of a feminist poem.
1.
பூதக் கண்ணாடியின் மேல் விழும் நிலவொளி தருவித்த
விழிப்பு நோய் விளைவித்த
வெய்யில் மச்சம் தேடிய
காமத் தடகளத்தில்
தினசரி அவசர நிகழ்வாகும்
முழங்காதல் முத்தம்
2.
ஊறுகாய் இரவு உருவாக்கிய
சிதறுகாய் காதல் விதைத்த
மேஜை ரோஜாவின் இலைகளில்
கொப்பளித்துத் துடிக்கும்
இளஞ்சிவப்பு பனித்துளிக் கோளங்களின்
ஒருக்களித்த நுனிமுனைத் தொட்டாற் சிணுங்கித்
தயக்க மயக்க முயக்கம்
3.
காதலின் ‘ஜெனரேட்டர்கள்’ கருக் கொள்ளும்
சப்த அழற்சியின் நேரெதிர் தரிசனம் உருவாக்கும்
மதன நீர் மழையிலைச் சாரல் சலசலக்கும்
திசைகளெங்கும் இயங்கும்
போதைக்கும் ஞானத்திற்கும்
ஒரே ‘லெவல்’
எனச் சொல்லும்
வேற ‘லெவல்’ கவிதை
4.
நம் தலைகள் உருண்டோடிய திசைக்கு
எதிர்பக்கம் கடவுளின் தினசரி நடை பயணம்
முண்டமோ தண்டமோ எனக் காத்திருக்கும்
துஷ்ட தேவதைக்கு
மந்திரித்த எலுமிச்சம் பழ அளவில்
ஒரு கிரகம் தர்ப்பணம்
5.
காதலர்களைக் கொல்லும் காட்சி விளையாட்டில்
இன்று ஒரு பெண் பாத்திரத் தோற்றம் கொள்ளும் அவனுக்குக்
கப்பல்களைக் கவிழ்க்கக் கூடிய இவளின் பிரம்மலோகச் சிரிப்பிலிருந்து தான்
ஆகாய நெருப்பினை அடுப்பெரிக்கும் காலக் கரியின் சாம்பல் நிறம்
துலங்க வாய்க்கும் எனில்
குறி வைக்கப்படும்
தூசி தட்டிய இந்தத் தோட்டா
எப்படியும் பாயும் போல
6.
கார்மேகத்தின் கர்மயோகத்தைப் போற்றும் உலோக பலத்தின் சுலபத்தில்
இவ்வுலகின் பல்லாண்டு வாழ்வில் காணக் கிடைத்த
ஒரு தங்க முட்டையிடும் உதிர்-கவிதை
அது உங்களுக்கு ஒரு சேதியையும் சொல்லும் முன்
நீங்கள் வன்புணர்வீர்கள் என்றால்
நீங்கள் வெறுமனே சில சொற்கள் பிதற்ற வந்த இந்த உலகில்
இன்று உமக்கும் நாம் ஒரு ‘வானிலை அறிக்கை’ தான்
7.
ஆறு சுவர்களுள் அடைபட்ட இருவர்
ஆற்றாமையின் ஆனந்தத்தில் அனத்திய
கண்ணீரின் வழிந்தோடும் பாதை காட்டிய
சவக்குழியில் பெற்ற சமாதானம் கொண்டு
எல்லோரும் சேர்ந்து எழுதிய புத்தகம்
இந்த பரிசோதனை யதார்த்தம்
8.
‘உருவாக்கச் செ.நு.’* உருவாக்காதது:
லக்ஷ்மி பூஜை
தாமரைப் பூக்களின் மேல்
பட்டும் படாமலும் தீர்த்தத் துளிகள்
*– ‘உருவாக்கச் செ.நு.’ – உருவாக்கச் செயற்கை நுண்ணறிவு – Generative A.I.
9.
காளான் குடையோரம் சொட்டும் மழைத்துளிகளை
எண்ணிக் கொண்டிருக்கிறாள்
ஒரு புதிய விளையாட்டு கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது
சாம்பல் கிண்ணத்திலிருந்து உயிர்த்தெழும் பறவைகளுக்கு
திவசம் கொடுத்தாகிவிட்டது
10.
கவிஞர்கள் இறந்துவிட்டனர்
ஓவியர்கள் இறந்துவிட்டனர்
நடிகர்கள் இறந்துவிட்டனர்
நீண்டு கொண்டே செல்லும் இவ்வுலகில்
கரகம் ஆடும் சொர்க்கம்
அபத்தம் ஒரு அணிகலன்
என்கிறது
11.
நான் உன்னை விட்டுப் பிரியும் நாளின் பிரியத்தைக்
காலம் என் கணினி ஜாதகத்தில் எழுதியிருக்கிறது
குழப்பத்தின் அழகு மலர்வித்த
ஒழுங்கின்மையின் நேர்த்தி
வாழ்வின் சாதாரண தருணங்களைக்
கொண்டாடிக் களிக்கிறது
திண்டாடிக் கழிகிறது
நம் அகாலம்
பாரம்பரியக் காதல் குறித்த
கேலிகளைக் குலுக்கியபடி
நகர்கிறது நகரம்
12.
பூரணத்தின் அபூரணத்தில் கிளர்ந்தெழும்
சமச்சீரற்ற அபூர்வ கணத்தின் சாரத்தை
ஓரத்தில் கொட்டினான்
சலிப்பான நடைமுறைகளும்
மந்தமான முன்கணிப்புகளும்
நிறைந்த ஒரு நாளை
விவரிக்கத் தொடங்கினான்
மெய்போருள் தேடும் ஞானத்தை நிராகரித்து
மேலும் ஒரு வரி எழுதினான்
13.
இரைச்சலின் ஒழுங்கற்ற இசையில்
பிறக்கிறது இந்த சூர்யோதயம்
வண்ணங்களும் உருவகங்களும் கைகோர்க்காத
அந்த அஸ்தமனத்தை
பிறகு விவரிக்கிறேன் என்கிறது
இந்த அசரீரி
14.
முரண்பாடுகளின் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன
விரும்பத்தகாத கடுமையின் உச்சத்தில் இந்த அசைகள் எழுதப்படுகின்றன
பீங்கான் பாத்திரங்கள் உடைபடுகின்றன
தெளிவின்மையின் வெளியில்
நிச்சயமற்ற தன்மையின் அழகியலில்
உருவகங்களையும் குறியீடுகளையும் உபயோகப்படுத்தும்
ஆர்வத்தை மட்டுப்படுத்தி
சலனமும் மருட்சியும் மலர
இணக்கத்தின் சீர்கள் கொண்டு
எதிர்த்துக் கடக்கிறது
பிரதியின் நிதானம்
15.
அழுக்குக்கும் அப்பழுக்குக்கும் இடையே
நெளிகிறது சட்டை யுதிர்த்த காலச் சர்ப்பம்
ஆலகாலம் அமைதியின் பங்கத்திற்குத் தன் பங்கு கேட்கிறது
என் தோள் மேல் உள்ள குரங்கும்*
உன் தோள் மேல் உள்ள குரங்கும்*
பரம்பொருளின் தோள்களுக்குத் தாவிச் செல்கின்றன
* – தோள் மேல் குரங்கு – monkey on the shoulder – நேர மேலாண்மையில் கூறப்படும் ஒரு கருத்து – குரங்கு என்பது பிரச்சனையின் குறியீடு.
16.
நான் எனும் போதை
- ஒன்று: அவரவர் கை மது
என் பெயர் என்பது
நீ எனும்
உன் பெயரின்
போதை தான்
- ரெண்டு: நினைவெனும் பொய்
நீங்கள் நினைக்கிறீர்கள்
அப்படி
என்று
அப்படி
இல்லை
என்று
அவர்களை விடுங்கள்
நீங்களே சொல்லும்
காலம்
உங்கள் அருகாமையில்
ஒரு பாடையுடன் காத்திருக்கிறது
- மூன்று: மீதமுள்ள வாழ்வில்
என்ன மிச்சம்
வார்த்தைகளா
முத்தங்களா
நீயா
நானா
என்ன மிச்சம்
இது தான்
- நான்கு: பேரமைதியின் மது
அலுவலக மேலாளருக்கு
மனைவிக்கு
மகனுக்கு
பெற்றோருக்கு
உற்றோருக்கு
மற்றோருக்கு
தெய்வத்திற்கு
நன்றி
இன்றைக்கும்
என்னை வாழ விட்டீர்களே
17.
உண்மையிலேயே இது உருவாக்கச் ‘செ.நு.’ உருவாக்கக் கூடிய வகையிலா உள்ளது
அப்படியா
தூண்டல் சொற்றொடர் பொறியியல் 1 வழிகாட்டுதல்கள் படி இவை இல்லையே
அப்படியா
‘செ.நு.’ எழுத்துப் போலி சோதனைச் செயலி 2 குழம்புகின்றதே
அப்படியா
ஒரு அதீத மொழி மாதிரி 3 உங்களை அச்சுறுத்துகிறது
பரிசோதனை வெற்றி
அப்படியா
தீபாவளிக் கோலம் கலைத்து
இழுத்துச் செல்லும் செவ்வெறும்புகளின் வரிசையிலே
ஒற்றை எறும்பு பாதை மாறுகிறது
1 – தூண்டல் சொற்றொடர் பொறியியல் – prompt engineering
2 – ‘செ.நு.’ எழுத்துப் போலி சோதனைச் செயலி – A.I. Plagiarism Checker
3 – அதீத மொழி மாதிரி – Large Language Model