1. நீர் ஆட்டம்
பெட்டிக் கடைக்காரன்
கடையைத் திறந்துவிட்டு
குவளையில் நீரள்ளி வீசியெறிகிறான்
காலை பிரார்த்தனைக் கூடல் முடிந்து
வகுப்புக்குச் சீராகச் செல்லும் சிறுமிகள் கூட்டமென
வரிசையாய் நீர்த்துளிகள் வாசலில் படியும்
மழை நின்றபின்
திறந்த முற்றத்தின்
துணி உலர்த்தும் கம்பிகள் மேல் நகரும் மழைத்துளிகள்
மாலை மழலைகளை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டுவரும்
பேருந்திலிருந்து குதித்திறங்கும் சிறுகுழந்தைகள் போல்
பூமிக்குக் குதிக்கும்
நதியின் நீர் சுழி
வட்டமாய் கைகோர்த்து
தட்டாமாலை
சுற்றும் சிறுமிகள் போலச்
சுழன்றாடும்
தற்சுழற்சி முடிந்து போன
மலட்டுப் பெண்
பார்த்த எல்லா நீர்மையிலும்
தனது பெறாதக் குழந்தைகளை
பிறகிப்படித்தானே
காணமுடியும்.
2. நீர் வளரி
பிடி வெந்தயத்தை நீரில் இட்டேன்
பெருங்காதலோடு
நீரை உறிஞ்சி சற்றே நெகிழ்ந்திருந்தது.
இரண்டொரு நாட்களில்
இடைநெகிழ்ந்த கர்ப்பிணியென
வெந்தய முகம் உருண்டு பளபளத்தது
மறுநாளே
வெந்தய கொண்டையில் வெண்ணிற முனை
சிறுபிள்ளையின் முதல் பல் போல தெரிந்தது.
பாத்திரம் முழுக்க
வெந்தய நீர் வளரியின் பிரசவ நெடி
வெந்தய மூக்கில்
கொக்கி போல வளைந்த முளைகள்
புதிதாய் சிரிக்கின்றன வெள்ளை வெளேரென.
இன்று பார்க்கிறேன்
வெந்தயமா அது
கோதுமையாகிவிட்ட வேறு ஒருத்தி.
3. அனுபவம்
சாகாமல்
இறுதி சடங்குகள் காணாமல்
பூந்தேர் ஏறாமல்
சுடுகாடுகளை எப்படி தெரியும்?
எந்த மகிழ் பயணத்திலும்
எப்போதாவது இடைபடும் இடுகாடு
இதுதான் இறுதிக்காடு என்று காட்டாதா?
சூலுறாமல்
இடை நெகிழாமல்
வலி எடுக்காமல்
பிரசவங்கள் இப்படித்தான் இருக்குமென்று எப்படி தெரியும்
ஏதேனும் சந்தோஷத்தை கொண்டாட
உணவுக்கு பின் உண்ணப் பிரியப்படும்போது
ஒரு ஸ்கூப் ஐஸ்கீரீமை
ஸ்கூப் எப்படி இலகுவாய் விடுவிக்கிறதோ
பிரசவம் அப்படித் தான் நிகழும்.
Art Courtesy : rgproprio.com
அருமை அருமை …