- கானல்
கண்டடைய இயலாத ஆகாயத்திற்கப்பாலும்
பூமிக்குக் கீழேயும் மேலும் கீழுமாய் ஒரே கணத்தில் நகர்கின்ற காலபேதத்தின் காருண்யம் மிகுந்த கண்களை
கோடைமுழுதும் பூத்துக்குலுங்கும்
ஒற்றைக் கொன்றைப் பூங்கொத்துடன் வழியனுப்பி வைக்கத்தான் பிரயாசைப்படுகிறேன்
இந்த நீண்ட இரவோ நினைவின்
மிகுதியால் மேலும் நீள்கிறது
பருவங்களைத் துண்டிக்கும் புவிசுழற்சியில்
தென்மேற்காகத் திசைமாறி நகர்கிற
மலைக்காற்றுக் கடலின் துளிகளைச்
சமவெளியில் பரப்புவதைப்போல
உரையாடலற்ற சொற்களை வாஞ்சையுறு மனத்தால் நிரப்பிக்கொள்கிறேன்.
என்றேனும் கண்டடையக்கூடும் என
செல்லுமிடங்களிலெல்லாம்
தடங்களை விட்டுச்செல்லும் ஒற்றனாய்ப் பயணிக்கிறேன்.
வசந்தங்களைப் பூக்கச்செய்யும் ஒற்றைச்சொல் என்னுடையதுதான்.
முகமறியாதவர் அழைக்காத பெருவிருந்தில்
அறிந்த முகம் அகப்படுமாவென ஏங்கித்திரிந்த நீர்க்கண்கள்
சற்றே வெம்மையுற்ற
இரு நிலவுகள் போல பிரகாசித்த அக்கணத்தைத்தான் உறையவைத்திருக்கிறேன்
எரிமலைகளின் இறுக்கம்
உரிய காரண காலத்தில்
வெடித்துச் சிதறட்டுமென.
- லயம்
குனுகும் புறாக்களின் இறகுகள் உதிரும்
பாழ்மண்டபத்தின் வௌவால் எச்ச வீச்சத்தில்
எனக்கான இடத்தைத் தேர்கிறேன்
வரலாற்றில் நிகழ்ந்த
எத்தனையோ இறந்தவர்களின் மேடாக
இவ்விடம் வசதியாகத்தான் உள்ளது
தூரத்துப் பனைக்காடுகளில் கீச்சும் கிளிகள்
சுற்றுவெளிப் பிரகார கல்தூண்களில்
தளிச்சேரிப் பெண்டுகளின் ஒயில்வண்ணம்
கல்தச்சனின் சிற்றுளியோசை
பிளவுற்ற மேல்தளத்தூணில் ஒளியும் நாகம்
பிளந்தவாய் யாளியின் கோரப் பற்கள்
ஆயிரமாண்டு மழையின் குளிர்மையை
இன்றும் பொதித்திருக்கும் கல் ஈரம்
மண்டப தூண்களிடை ஒளிந்து விளையாடும் காற்று
தொங்கு கயிற்றில் ஊஞ்சலாடி வெண்கலத்தின் பிரம்மாண்ட ஒலியெழுப்பும்
பச்சைப் பாவாடை சிறுமி
பல்கதிரும் பல்மதியும் பகலிரவு பலவும் கண்ட
மூலக்கருவறை நோக்கி திறந்த விழிகளோடே நிஷ்டையில் அமரலாம்தான்
பாழுங்கைகாரி பாவியெனைப் பார்க்காது
புறமுதுகிட்டால் என்ன செய்வது.
- வெற்றிட மழை
கானக இரவின் மழை
சாய்வுச் சாரலாக இந்தப் பயணத்தில்
முன்னிறங்குகிறது.
அடிக்கடி வந்து போகும்
வெளிச்சக்கதிர்களில் மின்னுகின்றன
சாரல் ஊசிகள்.
இலைகள் வருடித் திவலைகள் வழிய
கூந்தல் ஈரம் கசிந்து நனைய
சுள்ளிக் கட்டினைத் தலையில் சுமந்தபடி
இருகை காற்றிலாட நடக்கிறாள்
வனமகள்.
வலுக்கும் மழையில்
மேலும் நடக்க இயலாது கேட்கிறேன்
ஒதுங்கி இளைப்பாற இடமேதும் கிடைக்குமா?
வனத்தில் இல்லாத இடமா?
இருக்கும் இடம் புலனாக
நிற்க வேண்டும் மழை
அதற்கு மனது வைக்க வேண்டும் மழை.
காற்றற்ற பிரதேசத்திலும்
கட்டற்றுப் பெய்யும் இம்மழை யாருக்காக ?
- அறிவினா
காலத்தின் கிளைகளில்
தலைகீழாகத் தொங்கும்
பிரேதமாக அலைவுறுகிறது வாழ்வு
அதைத் தோள்மீதுதான்
சுமந்து செல்கிறேன்
பிரேதமோ
வேதாளமாக மாறி
கதைகளின் புதிர்களை
முடிச்சிடுவதும்
அவிழ்ப்பதுமாகச் சிரிக்கிறது
பயணத்தின் சிடுக்குகளும் முடிவற்றவைதான்
வேதாளம் கண்ணயர்வதும்
விழிப்பதும் முடிவுறா செயல்கள்தான்
பாரத்துடன் நடப்பதில்
வீக்கமுற்ற பாதங்களில்
வேதாளம் தன்னிருப்பின் வழியே
வாதைகளைத் தடவித் தெம்பேற்றுகிறது
துயரங்களைவிடவா மிகச்சிறந்த
பாடம் இருக்க முடியும் என.
சிந்தை பூரான்கள் ஒருபோதும் மெதுவாக நகர்வதில்லை
நிந்தை மரவட்டைகள் ஒருபோதும்
வேகமாக நகர்வதில்லை
போதாத இந்தக் காலம்தான்
ஒளி தோன்றி மறைவதற்குள்
விரைவாகக் கடந்துவிடுகிறது
முடிவின்மையின் பயணத்தில்
முதல் பதுமை கேட்கிறது
உன்னை அறிவாயா என
எனக்குத் தான் தெரியவில்லை
நான் வேதாளமா?
விக்கிரமாதித்யனா?
- இடமாறு தோற்றப் பிழை
“நட்சத்திரங்கள் எங்கு உள்ளன?
அவற்றைப் பார்ப்பவனின் மூளையில்”
– ஹெர்மன் ஹெஸ்ஸே.
உங்கள் கண்களில்
இப்படித்தான் தெரியவேண்டும்
என நினைக்கிற
உங்கள் முன் அப்படித்
தோன்றாத போது
முகஞ் சுளிக்கிறீர்.
எனது கண்களால்
என்னைப் பார்க்கிறது போல
எனது கண்களாலேயே
என்னைப் பார்க்க
உங்கள் கண்களைப் பழக்கப்படுத்துங்கள்
எனது
உள்ளெழும் தனிவிருப்பங்கள்
உங்கள் விருப்பத்திற்கெதிராக
இருக்கிறதெனில் நான் பொறுப்பல்லன்.
உங்களுக்கு
நான்
நாயாகத் தெரிவதற்கும்
நாயகனாகத் தெரிவதற்கும்
நானா பொறுப்பு.