cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 22 கவிதைகள்

ரேவா கவிதைகள்

ரேவா
Written by ரேவா

1. பிறர் அசைய

ஒரு விலை மதித்தல்
விற்றுத் தீர்க்கும் உயரத்தின் மேல்
பிம்பம் பார்த்து நொறுங்குகிறது
அலைமோதும் தொடுதலின் கணம் தாளா
பாதரசம்

சொல்வதை சட்டென்று சொல்

ஒரு கிளை முறிவுக்கு பக்கத்தில் நிற்கையில்
சட சடக்கும் கனவுச் சுள்ளிகள்
அடைகாத்து வைக்கும் அவ்வுயிர்
அதிரப் பிறழவேண்டும்
பட்டென்று


2. தவித்தடங்கும் பாவனை மேல்

நிற்பதற்கு எங்கும் நிழலில்லை

பழகிவிட்ட குற்றச்சாட்டை பகடி செய்கிறது
அறையின் தனிமை

தங்கிக் கொண்டிருக்கும் வெறுமை
தரமறுக்கும் காற்றை
ஈடு செய்ய எங்கிருக்கிறது கரம்

தட்ட திறக்கும் விலாசங்கள் இல்லை எவரிடமும்
தொலைத்த நடைமேடை
ஒரு பாசாங்கு

பாவனைகள் தரிக்கும் முகம்
பழிக்கு உடன் நிற்கும் அதிகாரம்
அப்பப்பா..
இவ்வுலகம் தேர்ந்த சகுனிகளின் கூடாரம்

தன் செயல் தவறும் விளைவில்
தப்புகள்
பிறர் தலைச் சுமை

இறக்கி வைக்க இரவா தனிமைக்குள்
என்ன உண்டு

தவிக்கும் நிலைக்கு
நிற்கப் பழக்கும் நிர்மூலம்
யாவற்றுக்குமான ஆதாரம்


3. பிழைத்தல் நாடகம்

ஒரு முகம் மறுமுகமாகும் கனத்தின் மேல்
நிற்கிறேன்

கையள்ளிய நீர்
முற்றாக கானல் எனில்
ரேகை வளைவில் மிச்சமிருக்கும் ஈரம்
முறை சொல்லி மறுக்கிறது
மனதை பல நூறாய் மரிக்க வைத்து

எல்லாத் தொலைவிலும் தாகம்
தந்து செல்லும் நாவறட்சிக்கு
பணயம் வைக்கப்படுகிற
காலம்
திரும்பத் தருவதெல்லாம்

ம்

மு

பிறழ்கிறேன்


4. உள் உள்ளாக

இருப்பின் வனம் மீது
உருள்கிறது
நத்தைக் கூட்டு மனம்

கூட்டு மனம் கொண்டு வந்த அத்தொலைவிற்கு
மீள் செல்லாதே
வழியெல்லாம் பள்ளம்
வலியெல்லாம் பயணம்

பயணம் கைகோர்க்கும் தனிமை
கடக்கத் தரும் துணிவிற்குள்
ஊமையிருட்டின் ஒற்றை திசையா இலக்கு
நட

நடப்பதில் தெளியும் திசைமேல்
கொள்ளும் விசையே
பசி

பசிக்கும் கனத்தின் மேல்
மேல் என
உருவம் கொள்ளும் உயரம்
உடைபடும் அப்பட்டம் வரையே
காற்று

பறக்கும் வரை
பசிக்கும் நடை
பயணம் கூட்டும் தொலைவுக்கு செல்

நத்தை மனம் உள் குவிய
உடையும்
உயரம்

துணைக் கொள்


கவிதைகள் வாசித்த குரல்:
ரேவா
Listen On Spotify :

About the author

ரேவா

ரேவா

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Mohamed Batcha

சிறப்பான கவிதைகள்

You cannot copy content of this Website