- கைமாற்று
பாட்டியின் பழைய வீடு
நாலுகட்டு வீட்டைப் போலவே இருக்கும்
எதிரெதிர் வரிசையில்
நான்கு அறைகள்
மேற்கு பார்த்த வெளிக்கதவு
எதிரெதிராக இருக்கும்
நான்கு அறைகளுக்கு
அடுத்துள்ள இடத்தில்
திண்ணை இருக்கும்
எக்கி ஏறி உட்காரும் அளவிற்கு உயரம்
திண்ணையின் தென்கிழக்கு மூளையில்
திண்ணையில் குழிவிழுந்தது போல்
ஒரு ஆட்டு உரல்
மின்வெட்டு நாளில்
அதில் பாட்டி மாவாட்டுவதை
ஒன்றிரண்டு முறை கண்டிருக்கிறேன்
வாசற்கதவிற்கு கொஞ்சம் தள்ளி
இடிக்கும் உரல் ஒன்று இருந்தது
இராஜபாளையச்
சித்திரை திருவிழாவிற்கு
மாவிளக்கு எடுக்க
அத்தை, பாட்டி, அம்மா கூடி
வருடம் தோறும் மாவிடிப்பார்கள்
தெற்கு நெட்டின் முதல் அறை தான்
பாட்டியின் சமையல் அறை
தங்க மூலாம் பூசிய கும்பா நிறைய
தாத்தா அதில் சோறு சாப்பிடுவது
இன்னும் நினைவில் நிழலாடுகிறது
தெற்கு நெட்டின் இரண்டாவது அறை
தறி நெய்யும் அறை
அந்த அறையில்
தொங்கிக் கொண்டிருக்கும்
அம்மா, அத்தை மற்றும் மாமாவின்
சிறுவயது கருப்பு வெள்ளை புகைப்படங்கள்
வடக்கு நெட்டின் முதல் அறையில்
இன்னும் உலவுகின்றன
கோடை விடுமுறையில்
உறக்கமில்லா இரவுகளில்
அக்காக்கள் சொல்லிய
சினிமா படக் கதைகள்
வடக்கு நெட்டின்
இரண்டாம் அறை
பழைய கிடங்கு
அதில் கிடந்த
பழைய தகர டப்பாக்களை வைத்து
சிறுவயதில் விளையாடிய ஞாபகம்
இன்னும் இருக்கிறது
பாட்டி ஐந்து வருடங்களுக்கு முன்
புதுவீடு கட்டிக் குடியேறியிருந்தாலும்
பழைய வீடுகள் எப்போதும் புதுவீடுகளுக்கு
நினைவுகளைக்
கைமாற்றித் தருவதில்லை.
- பொழிப்புரை
நிழற்குடைக்குள் ஒதுங்கினாலும்
காற்றுக்கு இரைச்சல் அடித்து
நனைத்து விடும் மழையும்
அலை தான்
கரையில் எட்டி நின்றாலும்
பாதங்களைத்
தொட்டுத் திரும்பும் அலை
மழை விட்டாலும்
தூவானம் விடுவதில்லை
நதி வெள்ளம் காயும்
கடல் வெள்ளம் காயுமா
சொல்லடி என் கண்மணி
பொலிவே பொழிப்பே
பிழையற்ற என் பிழைப்பே.
- குருசேத்திரம்
அம்மாச்சிதான்
சின்ன சித்தியின்
தாழிருங் கூந்தலை பராமரிப்பாள் எப்போதும்
சக்கர வியூகம் போன்று
விழுந்து கிடக்கும் சிக்குகளைச் சிணுக்கோலியால் உடைத்து
கௌரவர்களை அழிப்பது போல்
பேன் சீப்பால் பேன்களை வழித்து
அம்புகளை வாரி இறைப்பது போல்
ஈருளியால் ஈர் இறைப்பாள்
பாஞ்சாலி
துரியனின் இரத்தம் பூசி
குழல் முடிந்ததைப் போல்
இறுதியாக
முயல் இரத்த நிற எண்ணெய் பூசி
சித்தியின்
முழங்கால் அளவு கூந்தலை வாரி
ஒற்றை ஜடை போடுவாள்
ஜடை பின்னும் போது
சித்தியிடம் அம்மாச்சி
திருத்தணிக்கு
நேர்ந்து கொள்ளடி
தினமும் இதுவொரு வேலை
அரை பிளேடு போதும் நாசுவனுக்கு
முழுக்கூந்தலையும்
மொட்டை அடிக்க என
கேலி கிண்டலும் செய்வாள்
இது பதினெட்டு நாட்கள் அல்ல
தினமும் ஒரு மணி நேரம்
வீட்டில் நடக்கும் குருசேத்திரம்.