வழக்கமாக நடக்கும்
வளைந்து நெளிந்த குறுஞ்சந்து
நாய்கள் ஜாக்கிரதை பலகை தாங்கிய
மூன்றின் கீழ் நாற்பது வீட்டின் முற்றத்தில்
இன்றும் அமர்ந்திருக்கிறார்கள்
ஒரு கள்ளிச்செடியும் பின்னொரு தாத்தாவும்
கள்ளிச்செடி எனைப்பார்த்து வாலாட்டும்
போதெல்லாம் தாத்தா கள்ளிச்செடியிடம் குறைப்பார்
நான் பின்கால் உயர்த்தி சிறுநீர் கழிக்கும் இடத்தில் தான்
முன்னொரு காலத்தில் அவரது மகன்
மட்டைப்பந்து விளையாடுவானாம்
பழ நினைவுகள் வந்ததும் தாத்தா கண்களைத்
துடைத்துக்கொண்டு எனக்கும்
கள்ளிச்செடிக்கும் தலைகோதுவார்..
பண்ணையாருக்கு டாக்டர் குழந்தை
பிறந்திருப்பதாகச் சொன்னார்கள்
பரிசு கொடுத்து விருந்துண்டு வந்தோம்
கிருஷ்ண சாமி ஐயரின் மகனுக்கு இன்ஜியர் மகள்
பிறந்தபோதும் அதையேதான் செய்தோம்
பின் ஊரில் உள்ள ஊன்குடிகளுக்குப்
பிறந்த பைலட், சயின்டிஸ்ட்,
போலீஸ், கலெக்டர், ஊதாரி, பொறுக்கிக்
குழந்தைகளுக்கும் அதைத்தான் செய்தோம்
புழுக்கமற்ற ஒருநாளில் காலணியாத
சொக்கையனுக்கு மனிதக்குழந்தைப்
பிறந்ததாகப் பேசிக்கொண்டார்கள்
நாங்கள் யாரும் அந்த பக்கம் போகவே இல்லை.
கண்ணாடி அவ்வப்போது என் முன் நின்று
தன்பிம்பம் பார்த்துக்கொள்கிறது
சில சமயங்களில் சிரித்துக்கொண்டே
புருவம் உயர்த்துகிறது
ஒருநாள் ஆடையவிழ்த்து
வெட்கத்தில் சிணுங்கியது
நேற்று என்ன நினைத்ததோ பாவம்
அவசரமாக இரண்டு சொட்டு
கண்ணீர் விட்டுச்சென்றது
இன்று நிதானமாக வந்தும்
ஏதும் பேசாமல் மௌனித்து நின்றது
ரசமற்ற நான் பேசுவது உனக்குக் கேட்கிறதா
என் மனக்கண்ணாடியே!
Art Courtesy : The Visual Vamp
Subscribe
0 Comments