- நனையும் மார்புகள்
நீ நோயடைந்த இரவொன்றில் உன்னருகில் அமர்ந்து
ஒளிரும் நட்சத்திரங்களையும் உன்னையும்
மாறிமாறி பார்த்துக்கொண்டிருக்கிறேன்
தலைகீழாகத் தொங்கும் வௌவாலின் கண்களோடும்
உனக்காக எத்தனை இரவுகள் விழித்திருக்கிறேன்
வௌவாலைப் போலவும் தொங்கியிருக்கிறேன்
வாழ்க்கையின் பிடியற்ற கொப்புகளில்
விடியட்டும் ஆறுதலாக விடியட்டும் என்கிறாய்
கொட்டும் பனியில் நனைந்து கொண்டிருக்கின்றன
என் மார்புகள்
- ஆயுள் நதி
வெகு தொலைவில் தெரியும் மலைகளின்
சாயல் நீ
எதிரே வரும் மான்களுக்கு உன் விழிகள்
அதன் குறுகி வளைந்த கொம்புகளில் அன்பையும்
தீராத மோகத்தையும் மாட்டிவிடுகிறேன்
யானையின் சிறு கண்ணில் தெரியும் பெரும் வனம் நீ
தாகப்பட்டவர்களின் தாகம் போக்கும் நதி உன் வீட்டிலிருந்தே வருகின்றது.
காய சண்டிகைகளின் பசிபோக்கும் அட்சயபாத்திரம்
உன் காலத்தின் கரங்களில் உள்ளது.
மதுக்குவளையின் அடியில் தங்கிய கடைசி மதுவின்
அடர் போதை நீ
- தாபம்
நிலம் ஆனந்தமாகப் பாடும் இம்மழை இரவில்
நாம் ஆனந்தம் கொள்ள வேண்டும்
நினைவுக்குப்பக்கம் நிற்கிறாய்
குளிர் குத்தும் இவ்விரவில் கட்டிலின் விளிம்பில் எறும்பென
நகர்கிறது நினைவு
கூர் உச்சி மலையில் வெகு சிரமத்தோடு தேனெடுத்தவனின்
ஆனந்தம், கலவியின் சுகம்
ஒரு போர்வைக்குள் வாழ்ந்த ஆறுதல்
இக்குளிர் இரவில்
மேலும் ஒரு கம்பளியென என்னைப் போர்த்துகின்றது.
மெல்ல மெல்லக் கட்டெறும்புகள் கட்டிலில் முன்னேறுகின்றன
அமைதியிழந்த கடலுக்கு ஆறுதல் கரைதானே
இருளடைந்த இம்மழை இரவின் அறையில் ஒரு மின்னல்
உன் தாபத்தின் கண்களை வெளிச்சபடுத்துகின்றது
கடலில் ஓடிக் கலக்கும் நதியென நம் உடல்கள் கலக்கட்டும்
Art Courtesy :JimWarrren