cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 2 கவிதைகள்

அம்மு ராகவ் கவிதைகள்


நெட்வொர்க் ஏரியாவுக்கு
வெளியே இருக்கிறாய்.
நான் உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிவிக்க
வேறு எந்த மார்க்கமும் இல்லாமலிருக்கிறேன்.
நான் நினைக்கும் நேரங்களிலெல்லாம்
ஏதேனும் ஒரு சமிக்கை
உன்னிடம் நிகழ்ந்து விடுவதாகத் தெரிவித்திருக்கிறாய்.
என்னைத் தேடுவதாகத்
தோன்றும் எல்லா தருணங்களிலும்
நான் பேசினால்
இப்போதுதான் நினைத்தேன் என்கிறாய்.
எனக்கும் அவ்வாறே உன்னிடம்
நிகழ்கிறது.

எல்லாமும் பார்த்துக் கொண்டிருப்பது போலவும்
கேட்டுக் கொண்டிருப்பது
போலவும்
நெருக்கத்திலிருக்கும் நீ
தூரத்தில்
நெட்வொர்க் ஏரியாவுக்கு வெளியே இருக்கிறாய்.
நீயும் நானும்
வேறுபட்ட இரண்டு
கம்பெனிகளின்
சந்தாதாரராக இருக்கிறோம்.

நெட்வொர்க் கம்பெனிகளிலிருந்து
வெளியேறுவது
ஒரு சிம்கார்டை மாற்றுவது போலச்
சுலபமானதல்ல.


பிறருக்கு நான்
எப்படித் தோன்ற வேண்டுமென்பதை
என் வீட்டுக் கண்ணாடி
பிரதிபலித்துக் கொண்டேயிருக்கிறது.
கண்ணாடிக்குத் தெரியாது
முன்னிற்பது நிர்வாணமான
கண்ணாடியென்று…

னக்குமெனக்குமான
விளையாட்டு
இப்போதோ அல்லது எப்போதுமே
முடிவுறுமென்று தோன்றவில்லை.

ஒரு குடுவையில் உழன்று கொண்டே
மலையின் சிகரங்களிலிருந்தும்
சமவெளி பிரதேசத்தில்
மதில் சூழ்ந்த வசிப்பிடங்களிலிருந்தும்
நானும் சுற்றுகிறேன்.

விண்மீன் உருகிவிழுவது போலவும்
ஒரு சாரையோ அல்லது ஆமையோ
மலைப்பாதையொன்றைக் கடப்பது போலவும்
ஒரு இராட்டையைப் போலவும்
நள்ளிரவில் விரைந்து செல்லும்
ஒரு வாகனத்தின் சக்கரம் போலவும்
நான் சுற்றுகிறேன்.

ஒரு தர்வேஷ் போலச் சுற்றுகிறேன்
ஒரு குயவனின் அச்சில்
குழைந்த மண்ணாகச் சுற்றுகிறேன்

எவையெல்லாம் சுற்றுவதற்கானதோ
அவைகளைப் போலவும்
அவைகளைப் போலல்லாமலும் சுற்றுகிறேன்.

திளைத்துச் சுற்றும்
எனக்கு
நீ அன்பைப் பரிசாக்குவாயின்
நிர்ணயிக்கப்பட்ட ஒருநாள் நான் சுடராவேன்.


Painting Courtesy :  Kamal Rao  – ArtZolo_com

About the author

அம்மு ராகவ்

அம்மு ராகவ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website