சம்பவம் – 1
எனக்கு முன்னால்,
இந்த விடியற்காலத்திருளில்,
இரு கேள்விகள்
1.புரிவது போல தலையாட்டுவது
2.‘புரியவில்லை’ எனச் சட்டென சொல்வது.
இப்பொழுது எனக்கு மறதி வேண்டும்.
யாராவது தருவியுங்கள்.
அச்சுறுத்தும் நிழல்
எந்நேரமும் ஈரம் தரும் நிறம்
தினமும் ஒரு மலர் மலர்ந்து
சிவப்பைத் தருகிறது
அது தரும் ஈரம் காயவேண்டும்.
அது
அடியில், ஆழத்தில், சிறு ஊற்றில், பெருங்கடலில்
முன்பு பருகின நீராக
நினைவில் வருகிறது.
சம்பவம் – 2
சற்றே
வெளிறிய விடியலில்
இப்பொழுது,
பெருந்தாகமாய்
நீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்தேன்.
இந்த நீர் மறதியின் பெரும் உபரி
காய காய ஊறிக்கொள்ளும்
ஒரு ஊற்று
என் அப்பாவித்தனங்களுக்குள்
நீரின் அடையாளம் மிகப்பெரிது
சிறு தழுவலாக, ஆழமான சுழலாக,
நடுக்கமாக, தப்பித்தலின் பொருட்டும்
இந்நீரின் கரங்கள்
என்னை உடைமையாக்கிக் கொள்ளும்.
அதில், கீறிக்கொண்ட பின் வெளி வரும்
சிவப்பினைத்துடைப்பதும்
நீரின் அன்றாடப் பணி
சம்பவம் – 3
பளீரிட்ட விடியலில்,
நற்சம்பவம் என்பது
சுத்தப்படுத்திய
ஒரு கனியின் முதல் பங்கை வாங்கிப்
புசித்தல் போல….
அவசரங்களில் நேருங் குழப்பமாய்
கூட்டப்பட்டோ, குறைக்கப்பட்டோ
கனி பங்கீடு செய்யப்படுகிறது.
நிறைய அணி வகுப்புகள் இருக்கும் போது,
கிறுக்கின எழுத்தைச் சித்திரமாக்கல் போல
கனியின் பங்கீடு
குழப்பமில்லாது நிகழ வேண்டும்.
சுத்தமான கனிகள்
யாவும் புசிக்கத்தான்.
காலப்போக்கில்,
அதில்
சிதறும் இணுக்குகளுக்குச்
சிவப்பு நிறம் பிடித்துப் போய் விடுகிறது.
அவ்வளவு தான்….
சம்பவம் – 4
சிறிது சிறிதாக
விடிந்துக் கொண்டிருக்கும் விடியலில்
ஒரு நீர் நிலை தென்பட்டது.
என்னிலிருந்து சொட்டு சொட்டாக வடியும் நீரில்
தன்னை நிரப்பிக் கொள்ளும்
அதற்குக் கால வரையறை இல்லை.
குறைவான, மிகக் குறைவான வாழ்க்கையில்
எல்லை என்பதென்ன?
சேறு நிறைந்த பள்ளத்தில் புரள்.
சமவெளியில் துயில்கொள்.
உச்சி மலையில் ஏறு…
பின் நிலம் காண வா….
புறப்பாடு என்று பயணம் கொள்….
கிடைக்கும் அனுபவத்திரளில்
உன்னை மறதி என்பது எரித்துக் கரியாக்கும்
சம்பவம் – 5
ஒரு விடியலில்,
யார் யாரோ பேசிக் கொள்கிறார்கள்
அதில் கவனமும், அலட்சியமும் இருக்கக்கூடும்
ஒப்புக் கொள்ளவும் நேரிடலாம்
மாறுபடவும் தோன்றும்.
வாதம் புரிந்து குனிந்தும் நிற்கும்.
பின் நேராகி, துண்டுப்பிரசுரமாய் பரப்பிக் கொள்ளும்
என்னவாகயிருந்தால் என்ன?
இங்கு,
மொழி என்பது
பிரத்தியேகமாய் ‘பேசுதல்’ என்ற வடிவத்திற்குள் வந்துவிட்டது.
நான் அதை மறக்க வேண்டும்
என் நீர்ச் சொட்டுகளுக்கு
அது புரியாமல்
திரும்ப திரும்ப சிவப்பைத் தருகிறது.
அந்த அடர்த்தியின் பலம்
என்னால் பொறுக்க முடியாதது.
திரும்பவும் சொல்கிறேன்
மலர்ந்த சிவப்பைக் கையளிக்காதீர்கள்.
சம்பவம் – 6
இப்பொழுது,
நன்கு விடிந்த பொழுது.
ஒரு நீர் நிலை மறுபடியும் துணையானது.
வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன்
நிறைய கண்கள் தாங்கியிருந்த முகங்கள் என்னைப் பார்க்கத் தொடங்கியிருந்ததில்
சிவப்பும், இளஞ்சிவப்பும் தெரிந்தது.
அந்தக் கண்கள் அனைத்தும் நீர் நிலைகளில்
குழுமி சிரிக்க ஆரம்பித்தன.
இப்போது, நீர் நிலை முழுதும் சிவப்பு பரவியது கண்டு நகர்ந்தேன்.
என்னைப் போகவிடாமல்,
கண்களைத் தாங்கிய உடல்கள் பின் தொடர்ந்து,
மறதியைத் தேடி அலைகிறாயா?
எனச் சத்தமிட்டு சிரித்து,
மறதியென்பது அசைவற்ற ஒரு வெப்பச் சம்பவம்.
உடலென்பது அதில் ஆடும் ஆரவாரம்.
இப்பொழுது சொல்….
உடல்களைப் பற்றிச் சொல் ….
என ஆணையிட்டன.
சற்றே சமநிலையானேன்….
கேள் உடலே….
முன்னாளிலேயே
“உடல் குளிர்ந்து
அனலில் ஆடுகின்ற
சம்பவம் உணர்த்தியவள்
என் அம்மை”
தவிர,
“நீ சொல்லும் சிவப்பு நிறத்தில் பதிந்து ஆடுவது
கால்கள் தான் என்றேன்”
உடல்களின் மௌனத்தில்
நிலம்
என்ன சம்பவமெனத்
திரும்பிப் பார்த்தது.
Art Courtesy : PaleArtDesign