முழுநிலவு நாளில்
ஜொலித்திட்ட அம்புலியைக் காட்டி
அது என்னவென்று கேட்டவனிடம்
தந்தை தனக்களித்த விளையாட்டுப் பொருள்
எனப் பதில் தந்தது
கையில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த குழந்தை
இன்னும் பேச்சினை வளர்க்க வேண்டி
அவ்வளவு உயரத்தில் இருப்பதன்
காரணம் வினவிட
தான்தான் அங்கே வைத்ததாய்க் கூறி
பிஞ்சு விரல் நீட்டிக் குதூகலித்தது
சக குழந்தையொன்று
அதனைப் பிடுங்கிக்கொள்ளும் அபாயமிருப்பதால்தான்
எட்டாத் தொலைவில் வைத்திருக்கும் காரணத்தைக்
காதுக்குள் இரகசியமாய்ச் சொன்னது
தினம் தினம் தேய்ந்து
முழுதாய்க் காணாமல் போனதொரு நாளில்
மனம் பதைபதைக்க
வேகமாய் ஓடிச் சென்று
விண்ணில் பதுக்கப் பட்டிருந்த நிலவு
தொலைந்து போன செய்தியைச் சொன்னதும்
பின்னே மறைத்திருக்கும் கைகளை
மெல்ல முன் கொண்டுவந்து
விரித்துக் காட்டி
விளையாட வேண்டி
நேற்றே பத்திரமாய் எடுத்துவைத்திருப்பது தெரியாமல்
ஏமாந்து வந்திருப்பவனைக் கேலிசெய்து
கைகொட்டிச் சிரித்த
மழலையின் கண்களுக்குள்
மேலும் இரண்டு பௌர்ணமிகள்.