1. தற்சார்பு விதி
ரகசியத்தைப் போல் பின்தொடரும் குரல்
உனக்கு
ஒரு பெரும் மர நிழல்
வெயில் பூக்க உதிர்க்கும் காற்றுக்கு
தலையசைக்கிறது
சருகெனப் பெயர் ஏற்றப் பருவம் ஒன்று
கிளைக்குத் தாவ
இருள் பாதை எட்டிப் பிடிக்கும்
நினைவை
அத்தனை லாகவமாய் துழாவும் கை
உனக்கிருக்கிறது
அசைய அசைய பாடும் இலைக்குள்
நிலமுண்டு
அளந்து வைத்த ஆகாயத்தை
அள்ளிப் பறிக்கும் முயற்சியோடு
தூங்கிப் பார்க்கிறேன்
தலைகீழாய் தொங்கும் பழைய
கனவொன்றைப் பிடித்து.
2. அவிழும் முள்
எந்த நிமிடத்தில் நான் வாழத் தொடங்குகிறேன்
என்ற கேள்விக்குள்
நழுவி நழுவிப் பிறக்கிறேன்
இறக்கும் நொடி முள் காலம்
எழுதிச் சேர்க்கும் அர்த்தம்
அழைத்துப் பார்க்கும் திசைக்குள்
திறந்து திறந்து மூடும் கதவொன்றால்
கண்டுபிடிக்கப்படுகிறேன்
மூட
திறப்பதும்
திறந்து
மூடவும்
ஒத்த பொருள் போன்ற அசைவின்
நொடிக்குள் பிறழ
எத்தனை கனம்
இந்த நிமிடம்.
3. பாரம் தாண்டுதல்
எங்கோ பழைய கனவுக்குள்
அவிழா ஒரு முடிச்சென அழுத்திக் கொண்டிருக்கிறாய்
திரும்புதலின் திசை கண்டுவிட்ட பின்னும்
படபடக்கிற உணர்வை
சரிசெய்ய துடிக்கும் ஏதோ ஒரு நொடி
வளர்த்துப் பார்க்கிற மலைக்குள்
இன்றும் நீ
என் குகை ஓவியம்
கொடுத்துப் போனதல்ல
என் திசை
கொண்டு வந்து நிற்கும் இடம்
என் உச்சி
நீ இரு
என் பட்டாம்பூச்சிக்கு புது நிறமாய்.
Art Courtesy : DeviantArt