- அந்த நாள்
நகரங்களில் பூனைகள் பெருகி விட்டதாக
சொன்ன பால்ய நண்பன்
கரகரப்பாக பாடினான்
‘இந்தப் பாடல்.. ‘
‘தெரியல.. எங்கேயோ கேட்டேன். நீ சொல், பூனைகள் பெருக்கம் குறித்து என்ன நினைக்கிறாய்?’
என் வீட்டில் பூனைகள் வளர்வதாக சொன்னேன்
வீடெங்கும் சுற்றும் பூனைகள்
இன்று எதுவும் உண்ணவில்லை
நட்ட நடு இரவில் ஒரு சேரப் பாடுகின்றன
அதிகாலை கனவு மூட்டத்தில்
கேட்ட அந்தப் பாடலை
முணுமுணுத்தபடி
இந்த நகரைக் கடக்கிறேன்.
நண்பர்கள் வெறித்தபடியே
என்னைக் கடக்கின்றனர்.
- எதையும் சிந்திப்பதில்லை
நட்சத்திரமற்ற இரவினை தூய்மை செய்து தரும் மழைக்காலம்
இலையுதிர்வில் கிளை விரல்கள் பற்றிக்கொள்ளும் வான்வெளி
நிலமெங்கும் தொடர்ந்து இணக்கம் கொள்ளும் வேர்கள்
நூற்றாண்டுகள் கடந்தும் இறுக்கமற்ற பெரும் விருட்சம் ஓங்கி உயர்ந்து
சலசலவென எப்பொழுதும் உரையாடிக் கொண்டிருக்கிறது
நேர் எதிரே
அற்பங்களை கொண்டாடும்
துயரற்ற கேணிகளை எதிர்நோக்கும்
நீர் நிறைந்த குளத்தில் துள்ளி எழுந்து குதித்தோடும் உள்ளத்து மீன்கள்
மலைகள் சிந்திப்பதில்லை
Art Courtesy : healingart.com