- டபுள் டிக் என்பது புறவாசல் அல்ல
முட்டிக்கொண்டு உடைந்து உருளும்
கண்ணீர்த்துளிகளில்
முந்தைய இரவின் நிறம் மங்குகிறது
வந்திருக்கலாம் என்கிற காத்திருப்பின் மீது
நீ எழுதி முடித்த தீர்ப்பை
சுவரில் ஒட்டி வெறித்திருந்தேன்
முகம் பார்த்து சொல்லும் திராணியை இழந்துவிட்ட
கேவலத்தை நொந்துகொள்ள
கண்ணாடி உடைபடும் ஓசையை
ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறேன்
மாற்றிவிட்ட உன் புதிய வாட்ஸப் எண்ணைக்
கண்டுபிடிக்கும் வரை
வைத்திருப்பேன்
****
- இறங்கியிருக்கக் கூடாத முந்தைய நிறுத்தம்
நேயத்தின் எண்ணிக்கை சரியச் சரிய
கீழே நழுவுகிறது
உலகம்
நீங்கள் ஏறும் படிகள் உயர உயர
வானம் நெருங்குகிறது
அருகே
முன் பின் நகர்வுகளை பக்கவாட்டு அணைப்பாக
பதப்படுத்திக்கொள்ள விருப்பம் உள்ள
நன்றியை
குப்பைத்தொட்டியின் அருகே வாலாட்டி நின்றிருக்கும்
பிராணிக்கு நீட்டும்போது
முகர்ந்துவிட்டு அது உங்களை அண்ணாந்து பார்க்கிறது
வேட்டை நினைவோடு
தருணங்கள் பற்றின யோசனைகளற்று எரியும் பகலில்
பசியைக் கடந்து உட்கார்ந்துகொள்ளும்
பாதையோரம்
எண்ணிக்கை சரியச் சரிய
நழுவுகிறது கீழுலகம்
****
- கனவை விட்டுவிடுங்கள் அவை மறதிக்கு அப்பாற்பட்டவை
ஓர் இலை உதிர்ந்துவிட்டபோது அதனருகில்
ஒரு சொல்லைத் துணைக்கு வைத்தேன்
மெல்ல தன் பச்சையம் இழக்கத் தொடங்கிய சொல்லின்
நரம்புகள் முதலில் புடைத்தன
மௌனம் வெளிற
பிறகு
எழுத்தெழுத்தாக
கறுத்து நுனி கிளைப் பரப்பி
விளிம்புவரை முட்டிக்கொண்ட அர்த்தங்களை
வெயில் உறிஞ்சியது அதன் இறுதி சொட்டுகள் தீரும்வரை
தாகம் விளைவிக்கும் நிலத்தின் மடி மீது
ஊர்ந்து ஊர்ந்து கடக்கும் நிழலை
பரிகசிக்க முடிந்ததில்லை
மட்கும் சுருக்கங்களோடு இணைந்துகொண்டன
இலையும் சொல்லும்
இரவை விசாரித்துக்கொள்ள முடிகிற வேர்கள்
ஆழத்தில் புதைந்ததுண்டாம்
****
- இதனினும் சொல்லுவதற்கு ஏதாவது இருக்குமேயானால்..
வெகுதூரம் பயணித்து அடைந்த மாறுதல்கள் தம் முகவரியை ஏனோ இன்னும் மாற்றிக்கொள்ளுவதில்லை
ஒரு நம்பிக்கையின் கதவு திறந்தே கிடக்கும்போதும் அகல விரிந்த கைகள் ஏனோ வரவேற்க மறுக்கின்றன
நடு ஹாலில் வீற்றிருக்கும் அமைதியைத் தனிமையில் தோய்த்து கடைவாயில் அதக்கிக்கொள்ளும்போது ஏனோ இரவு முகஞ் சுளிக்கிறது
புகார்களைக் குறித்து விவாதிப்பதற்கு ஏற்ற மதுவை பழைய நிலவறையிலிருந்து ஏனோ
நாம் தருவித்துக்கொள்வதில்லை
புலன்களின் சாயல்களிடமிருந்து தப்பித்தோடுவதற்கு நுழையும் அலமாரிக்குள் ஏனோ
பழைய முகமூடிகள் அகப்படாமல் போக்கு காட்டுகின்றன
குறிப்புகளற்று நோக்கங்களற்று உட்கார்ந்திருக்கும் மாலை வேளைகளில் ஏனோ
விண்ணில் எரி நட்சத்திரங்கள் அங்குமிங்கும் பாய்ந்து பழிப்புக் காட்டுகின்றன
அத்தனைக்குப் பிறகும்
ஒரு குற்றவுணர்வின் கவுச்சியைத் துடைத்துக்கொள்ளுவதற்கு ஏனோ மனம் இசைவதில்லை
Art Courtesy : saatchiart.com