1.
கையிருப்பின் இரவுக்குள்
கனவின் ஒவ்வொரு வாசலையும்
திறந்தாக வேண்டும்
கனவிற்கு ஆயிரம் வாசல்கள்
சிலநூறு திசைகள்
எண்ணற்ற பாதைகள்
எந்தப்பக்கமும் தெரிந்தபாடில்லை
தேடும் அந்த ஒற்றை முகம்
ஒழுகும் நேரத்திற்குள்
தீர்ந்துவிடாதுதானே எதுவும்.
2.
உன்னிடம் சொல்வதற்கு நிறைய உண்டு
இந்தப்பகல் முழுக்க உன் காதுகளை
என் பக்கத்திலேயே நிறுத்திக்கொள்ள வேண்டும்
வேலையில் சிரத்தையோடு மூழ்கிய பொழுதுகளிலும்
உன் உள்ளங்கைகளைக் கோத்து
உயிர்ச்சூட்டை
எனக்குள் கடத்துவதைப்போல
அவ்வப்பொழுது மிக அழுத்தமான
சிறு பார்வையில் ஊடுருவி
அமிழ்ந்துவிடுவாய் கள்ள மௌனத்தில்
இந்த மௌனம்தான்
எத்தனை வெளிச்சம்
இருள்காட்டில் ஒற்றை விண்மீன் அது
வழியெங்கும் அக்காதுகள்
பின் தொடர்ந்தபடி இருக்கிறது
பகல் கடந்தும்.
3.
ஏகாந்தத்தைக் குழைத்துக் குழைத்து
தீட்டப்பட்ட வண்ணம்
நினைவெனப்படுவது
எதன் பொருட்டும் தீராத காதலும்
கடந்துவிட்ட புள்ளியென
மலர்தலுக்குப் பின்னான பூ உதிர்கிறது
கருப்பு வெள்ளை நிழலாய்
அறிந்தே வைத்திருக்கிறோம்
அன்பின் சுமையைக்
கவனத்திற்கொள்ளக் கூடாதென
என்னை மீறி உனக்கான திசையும்
உனக்கடுத்தான எனக்கொரு வாசலும்
திறந்தே வைத்திருப்பதாய்
நம்பித்தொலைகிறோம்
அதற்கு முன்
இப்பாலையைக் கடந்தாக வேண்டும்.