- கம்பிகளுக்கு உள்ளே!
காற்றில் தொங்கியபடி
காய்ந்த பூமாலையாய் நான்..
சிறுமியின் கண்ணில் விழுந்து
அவள் விரல்களில் பரிணமிக்கிறேன்..
மிருதுவான அவள் விரல்களில்
நான் ஒய்யார ஊஞ்சலாட..
எனைத் தொப்பென்று
கம்பிகளின் துவாரங்களில்
இறக்கிவிடுகிறாள்..
பொத்தென்று விழுந்த எனை
பந்தாடத் தொடங்கின
கோழிக்குஞ்சுகள்..
இங்கொன்றும் அங்கொன்றுமாக
எனைக் கொத்தி கூறுபோட தொடங்கின..
நானும் சளைப்பதாக இல்லை..
அவைகள் இழுத்த இழுப்பிற்கெல்லாம்
ஈடுகொடுக்கிறேன்…
குதூகலிக்கும் சிறுமிக்காக
எத்தனை நேரமாயினும்
நான் காத்திருக்கிறேன்..
இறப்பினில் ஓர் இறப்பைக் காண…
- கம்பிகளுக்கு வெளியே!
கடுங்குளிரில் ஒன்றின் மேல்
ஒன்றாகப் பசைபோல் ஒட்டிக்கொண்ட
குஞ்சுகள்…
குளிருக்குப் போர்வை தருகிறாள்
சிறுமி ஒருத்தி…
கனவிலும் காவல் நிற்கிறாள்
ஓணான்களின் குரல்வளையைக் கடித்து
இரத்தம் ருசிக்கும் பூனைகளிடமிருந்து…
அதிகாலை கூண்டைத் திறந்து
சூரியனின் கதிர்களைப் பருகச்செய்கிறாள்…
றெக்கைகளை நனைத்த கதிர்களைத்
தூக்கிக்கொண்டு
வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகின்றன
சிறு கீச்சல்களோடு..
கம்பிகளில் அமர்ந்த
காக்கைகள் உயிர்மூச்சிடம்
பேரம் பேச
கைகளுக்குள் அரவணைத்து
கதவடைக்கிறாள்..
உயிர்த்தப்பிய கோழிகள்
பரிமாறிக் கொள்கின்றன
பாசத்தை அவளிடம்..
Courtesy : Art :etsy.com