- அன்பெனும் பெருவெளி
மகள்
பிறந்தால்
என் காதலியின் பெயர்!
மகன்
என்றால்
உந்தன் காதலனின் பெயர்!
எதற்கு?
போலச் செய்தலொன்றும்
போர்க் குற்றமில்லை
பரிசுத்தமான பேரன்பின்
பரந்த வெளியில்
விட்டுச் சென்ற நேசங்களை
உரமாக்குவோம்
அதே
காதலன் / காதலியாகிட
சாத்தியமில்லை
அதனிலும் மேலான
அன்பில் திளைப்பது
சாத்தியம்
அன்பு எல்லையற்றது
அன்பு விதிகளற்றது
அன்பின் தேவையானது
இன்னொரு அன்பு
மட்டுமே
- லீதல்
லீதல் ஆற்றின்
நீரைப் பருகிவிட்டேன்
இன்னும் சில நிமிடங்களில்
முழு மறதியுண்டாகும்
இந்த வாழ்வை மறந்திடுவேன்
எவ்வித சலனமுமின்றி
உலகமும் என்னை மறக்கும்
சந்தேகமில்லை
மறதிக்குப் பழக்கிவிட்டால்
இறப்பொன்றும் அத்துணை
துயரமுமில்லை
மறத்தலையும் இறத்தலையும்
மயிலிறகால் பிணைத்து வைத்திருக்கும்
உன்னைத் தான்
முதலில் மறதிக்குப்
பழக்குவேன்
இறத்தல் என்னைப்
பழக்கட்டும்
*லீதல்- கிரேக்கத் தொன்மங்களில் வரும் ஆறு. அதன் நீரை அருந்துகிறவர்களுக்கு முழு மறதியுண்டாகும்.
- உன் வருகைக்காகவே
சமீபத்தில் ஒலிக்கிறது
நமக்கான பிரார்த்தனை கீதம்
அருகில் வந்துவிட்டாய் போலும்
தழும்புகளில் குருதி வழியக் காயங்கள் மீண்டும்
மினுக்கின்றன
வீசும் தென்றலின் சொஸ்தப்படுத்தும் நேசம்
நாளங்களில் விரவுகிறது
முகங்கள் பார்த்திடும் முன் பதித்த
பூவிதழ் முத்தங்கள்
கோடையின் பனிக்கால ரோஜாவாகிட
அடுத்த சந்திப்பு வரைக்குமான
புது காயங்களைக் கைவசம் வைத்திருப்பாயென்று அறிவேன்
இந்த முறையாவது
மறு சாத்தியத்திற்கான
சிறு எதிர்பார்ப்பைக் கூட
உண்டாக்கி சென்றுவிடாதே
மற்றபடி
உன் வருகைக்காகவே
காத்திருக்கிறேன்!
அருமை!
அருமை நண்பரே 😍