- வெயிலும் மழையும் பின்னே காற்றும்
நேற்றிரவு அந்த இடத்தில்தான்
ஒரு மழை பார்த்தேன்.
கண்டவரைக்கும்..
நனைந்தவர் நனையாதவரென்று
யாரிடத்திலும் யாதொரு கோபமுமில்லை அதனிடத்தில்.
நிதானத்தின் நிறுத்தத்தில்
தன் வரவை நின்று
எழுதிவிட்டுப் போயிருந்ததது.
இன்று அதே இடத்தில்தான்
விறைத்துக் கொண்டு
முறைத்தபடி படுத்துக் கிடக்கிறதொரு வெயில்.
இரண்டுக்கும் சாட்சியாக
நிற்குமந்த காற்று மட்டும்
தன் முறை வரும்வரைக்கும்
எல்லாவற்றுக்கும்
தலையாட்டி வைக்கக் கற்றுக்கொண்டிருக்கிறது.
தன்மீது உதிர்ந்து கிடக்கும்
வெயிலையும் மழையையும் காற்றையும்
தன்னியல்பில் உதிர்த்துவிட்டுப்
பசித்துக் கரைந்தபடி
பறக்கிறதொரு காக்கை.
இப்படித்தான் ஒரு நாளென்பது
எந்த வகையிலேனும்
என் வெறுமையைக்
கிள்ளிப் பார்த்துவிட்டுப் போகிறது.
விழுங்கிய இத்தனையையும்
பின் ஒரு கவிதையில் செரித்துவிட்டு
இப்படித்தான்
நகர்ந்து கொள்கிறேன் நானும்.
- கிணத்துவீடு
இந்தமுறை
ஊர் மந்தையை மிதித்தபோதே
கிணத்துவீட்டுப் பெரியாத்தா
இழுத்துக்கொண்டு கிடப்பதாகச் சேதி.
ஒருகாலத்தில்
ஊருக்காகவே கிணறு சமைத்து
ஊருக்கே உயிர் வளர்த்துக் கொண்டிருந்த
கிணத்துவீட்டுச் சொந்தக்காரி..
ஈரவாழ்வு வாழ்ந்த
அந்தப் பெரும்பழுத்த முத்திக்காரியின் உயிர்தான்
ஒரு ஸ்பூன் பாலில்
நொண்டிக் கொண்டிருந்தது
இப்போது.
அருகமர்ந்து
என்னைத் தெரிகிறதா பெரியாத்தா என்றபோது
மெல்ல இமை மட்டும் அசையக் கண்டது போலிருக்கையில்…
என்னைப்போல் பார்க்க வந்தவர்கள் யாரோ
திடுமென்று கேட்டு வைத்தார்கள்
கிணத்துவீடுன்னு சொல்றாங்க
கிணறெங்கே என்று.
சின்னக் கேள்விதான்
பற்றவைத்தது வேள்வித் தீ போல.
பெரியாத்தாவின்
குழியடைத்த விழியிரண்டும்
பால்கட்டிய மார்பென
பொசுக்கென நீர் கட்டிக் கொண்டன.
ஒரு காலத்தின்
காலமாகாத கண்ணீரைக்
காணச் சகிக்காது
நான் திரும்புகையில்
தெருமுக்கில் நின்று
ஒருமுறை அந்த வீட்டைத்
திரும்பிப் பார்க்கிறேன்.
உச்சியில் பெரியாத்தா பேரனின் பெயரோடு மின்னுகிறது
கிணற்றைப் புதைத்துக் கட்டிய
அந்த அதி நாகரீக மச்சு.
கொஞ்சம் கனத்திருந்த இரவை
நான் கடந்திருந்த போது..
தூரத்தே முழங்கியது
கொட்டுச் சத்தம்.