cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 24 கவிதைகள்

வில்லரசன் கவிதைகள்


  • சுடு வெட்சி

பெரும் காட்டின் வழியே
பட்டணம் செல்லும் இளைஞனின்
தோள்களில் உட்கார்ந்து கொள்ளும்
மஞ்சள் வண்ணாத்திகளின்
சிறகசைப்பில்
அவனுக்காய் காத்திருக்கும்
தாயின் தழுவல்

மெதுவாய் தலையுயர்த்தி
கூர்ந்து கவனித்துத் தலையசைக்கும்
ஓணான்களின் வழியனுப்புதலில்
விம்பமாய் விழுகிறது
ஊர்கிழவிகளின் கண்கள்

வழியெங்கும் சொரிந்து
கிடக்கும் நாவற்பழங்களின்
ஊதாச்சிவப்பில் அமிழ்கிறது காதலியின் அதரங்கள்.

எல்லாவற்றையும் ரசித்து
முன்னேறும் மோட்டாரின்
பின்னால்
சாரையாய் ஊர்கின்றன
பிரிவின் சுவடுகள்


  •  முடிவிலிக் கதைகள்

நீ தொலைந்த நாளில்
வானம் இருண்டிருந்தது
சாட்சியாய் நின்ற இரவுகள்
எதுவும் சொல்லமுடியாமல் விம்மியழுதன

தினமும்
பாடும் தவளைகள் தங்கள் குரல்வளைகளை
நசித்து அமைதியாகின
காற்றின் கால்களை முடமாக்கியிருந்தது துயரம்
மீளத் திரும்ப முடியாத
பெருஞ்சோகத்தில்
தென்னோலைகள் தள்ளாடின

தாத்தனே !
நேற்றைய இவ்விருளில்
நான் கேட்டுக் கொண்டிருந்த பெருங்கதையின் முடிவை எங்கனம் கண்டறிவேன்
எரியுமுன் சிதைத்தீயில்


  • இருளை தின்னும் நிலவு

சொற்கள் கஸல்களாய்
உருமாறும் பின்னிரவில்
நிலவைப் பாம்புகள் தின்னக் காத்திருக்கையில்
மூங்கில்களில்
முட்டி மோதித் திரும்பும்
காற்றின் நாவுகள் பாடிக்கொள்கின்றன நமக்கான பாடலை

எல்லா வார்த்தைகளுக்கும்
உம் கொட்டிக் கண்கள் விரிய
சிறுகுழந்தையைப் போல
தலையசைக்கும் வதனத்தில்
விரிகின்றது
அன்பின் ரேகைகள்

நம்மருகே
மலையெனக் குவிந்திருக்கும்
தீர்ந்துபோன டிப்பி டிப்பிக் கடதாசிகளின் உரசலில்
உறக்கம் கலைந்து உரையாடத்தொடங்குகின்றன
எதிர்காலக் கனவுகள்

நதி நீரில் விழும் நிலவின்
விம்பமாய் ஆழத்துள் மூழ்கி
நிம்மதியாய்
குமிளம் விடும் கனவின்
இறுதியில் அங்கணமே
சிறு முத்தம்


 

About the author

வில்லரசன்

வில்லரசன்

சர்வேஷ்வரன் வில்லரசன் - பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை இறுதி ஆண்டு மாணவர். இலங்கை கிளிநொச்சியைச் சார்ந்தவர். 2023 ஆண்டு "பசி உறு நிலம்” எனும் கவிதைத்தொகுதியை வெளியீடு செய்து உள்ளார்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website