cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 24 கவிதைகள்

வருணன் கவிதைகள்

வருணன்
Written by வருணன்

  • புலிவனம்

மீளவே இயலாத யட்சியின்
பெரும்பசி வாயில் அகப்பட்ட
சிறு இரையென
செய்வதறியாது திகைத்து நிற்கிறது
காமத்தின் வாயில் இரவு.
இச்சைகள் இழிவென
ஒதுங்கியிருந்த பகல்களும்
இருட்டுக்குள் ஒளிந்து கொள்ள
இழிவெனப்பட்டது இரும்புச் சம்பட்டியென
தாக்கத் துவங்கியிருந்த நள்ளிரவில்
உலைக்களத்தில் உருகி வழிந்தோடுகின்றன
ஒப்பனைகள்
ஆதிவனத்திலலைந்த ஒற்றைப்புலியின்
இரை தேடும் பதுங்குநடையில்
எரியத் துவங்குகிறது காடு.


  • மீனின் ருசி

கவிதைகள் ஒன்றும்
பெரிய விஷயமில்லை
சொற்களால் மீன் பிடித்தல்
அவ்வளவே
மீன் எதுவெனக் கேட்காதீர்கள்
மீன்களில் தான்
எத்தனை வகை
எத்தனை ருசி.


  • முக்தி பவன்

புன்னகைக்குள் ஒளிந்திருக்கும் கண்ணீரையும்
இலட்சியங்களினின்று அதை ஒப்பனையெனக் கொள்கிற
சுயநலங்களையும்
சந்தர்பங்களினின்று மனித இயல்புகளையும்
தீர்ப்பிடல்களுக்கு அப்பாலுள்ள யதார்த்தங்களையும்
உங்களால் கண்டடைய முடியுமெனில்
முடிகிறதெனில்
நீங்கள்
அடைவதற்கு ஏதுமில்லை
இழப்பதற்கும்.
முக்தி.


  • இருத்தலை மறுதலிக்கும் யாத்திரை

திசையறியாத
அறியும் விருப்பங்களற்றதொரு
பயணத்தை மேற்கொள்கிறாளவள்.
விளையாடும் குழந்தையின் கரங்களில்
இழுபடும் குச்சியென
வழித்தடத்தை வரைந்தபடியே நீள்கிறது அப்பயணம்.
ஆச்சரியம், சுவாரசியம், திருப்பங்கள்
எதிர்பார்ப்பென எதுவுமில்லை.
பயணச்சுமையும்…
திறந்த கண்களுடன்
நினைவுகளென்றெதையும் தேக்காத இதயத்துடன்
சர்வ சுதந்திரமான கால்களுடன்
அவள் நகர்ந்து கொண்டேயிருக்கிறாள்.
தானேயொரு பயணமான அவளைப் பற்றிய
நெடுஞ்சாலைக் கதையொன்றை
நீங்கள் உங்கள் பயணங்களினூடாக
அவசியம் கேட்பீர்கள்.


Courtesy :
Painting: JimWarrren
கவிதைகள் வாசித்த குரல்:
வருணன் 
Listen On Spotify :

About the author

வருணன்

வருணன்

இயற்பெயர் லா.மா.ஜோ அந்தோணி. தூத்துக்குடியில் வசிக்கிறார். இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் இவர்; சினிமா மற்றும் இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சினிமா சார்ந்த கட்டுரைகள் படச்சுருள், வாசகசாலை இணைய இதழ், புரவி, பேசாமொழி இணைய இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதைகளும் அவ்வப்போது இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன.

இவரது ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ என்ற சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதி வாசகசாலை பதிப்பக வெளியீடாக 2020இல் வெளிவந்துள்ளது.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Mohamed Batcha

அபாரம்

You cannot copy content of this Website