- கடசர டப்பா
வானவில் முழுவட்டமாக
இருப்பதைப் போன்று இருந்தது
வட்ட வடிவ
வண்ணச் சாந்துப் பொட்டு டப்பா
பார்த்தவுடனே நன்முல்லைக்காக
அதை அங்காடித் தெருவில் வாங்கிவிட்டேன்
இரவில் நன்முல்லைக்கு
அவளது அம்மா
நெற்றியில் வெள்ளை வண்ணச்
சாந்துப் பொட்டை வைக்கிறாள்
அப்படி வைக்கும் போது
சந்ரோதயமே அவள் நுதலில்
நடப்பதாக ஐதீகம்
புலரியில் குளிப்பாட்டி
மஞ்சள் வண்ணச்
சாந்துப் பொட்டு இடுகிறாள்
இது அருணோதய ஐதீகம்
மாலையில் சிவப்புப் பொட்டு என்பது
அச்சு அசலாக அந்தியின் சிவப்பு
அமாவாசை இரவிற்கு
கருப்புப் பொட்டு என்பது
ஒட்டுமொத்த வானத்திற்குமான
திருஷ்டிப் பொட்டு
இந்த வண்ணச்
சாந்துப் பொட்டு டப்பா
எனக்கு எனது அம்மாவின் கடைச்சரக்கு டப்பாவை
நினைவுப்படுத்துகிறது
அதில் நடுமையகமாக
ஒரு கிண்ணம் இருக்கும்
அதைச் சுற்றி
ஆறு கிண்ணங்கள் இருக்கும்
நடுமையமான கிண்ணத்தில்
விரல் மஞ்சள் கிழங்குகள் கிடக்கும்
சுற்றி உள்ள ஆறில்
கடுகு சீரகம் மிளகு
வெந்தயம் பெருங்காயம்
சில்லறைக் காசுகள்
இருக்கும் முறையே
வண்ணங்கள் குழைந்து கிடக்கும்
சாந்துப் பொட்டு டப்பா
வாசனைகள் குழைந்து கிடக்கும்
கடைச்சரக்குப் டப்பாவை
நினைவுப்படுத்துவதில்
வியப்பேதும் இல்லை
வண்ணங்களை உணர
கண்கள் எனும் இரு வாசல்கள்
வாசனைகளை உணர
இருநாசித்துவார வாசல்கள்.
- கூந்தல் குறித்து இரண்டு
ஒன்று
நீ நடக்கும் போது
ஒற்றை ஜடையாய்
பூ வைத்து
பின்னிய உன் கூந்தல்
வலமும் இடமுமாக அசைந்து
பிருஷ்டத்தின் கன்னங்களை
மாறி மாறி
செல்லமாக தட்டிக் கொடுக்கிறது
உறங்க வைக்க
வயிற்றைத் தட்டிக் கொடுக்கும் தாயாக
ஏன் சொல்லக் கூடாது
நீ நடக்கையில்
இப்படி அசையும்
உன் கூந்தலை
சூடிய பூவை
தாலாட்டும் தொட்டில் என்று?
இரண்டு
நீ கூந்தல் நறுக்க
அமர்ந்து எழுந்த
பார்லர் சேரைச் சுற்றிலும்
காற்றுக்கு விழுந்து
சருகுகளான இலைகளைப் போல்
கத்தரித்து விழுந்த
கேசக்கற்றைகளின்
ஆசாபாசங்களை
அனுஷ்டிக்கிறது இந்தக் கவிதை
உன் கூந்தல் நதி
இடுப்புக்கு கீழ்
இறங்கி வழிந்தோடவே
எப்போதும் நினைக்கிறது
நீ தான் அதன்
ஆசைப் பெருக்கை
அறியாமல் எப்போதும்
கழுத்திலேயே கத்தரியால்
பாப் கட், பிக்ஸி கட் போன்ற
அணைகளைக் கட்டி
விடுகிறாய்
சேலைச் சோலையில்
இருந்து கொண்டு
டாம்பாய் போல்
டாம்பீகம் செய்வது
தகுமா?
இனியாவது கத்தரியால்
அணைகட்டுவதைக்
கைவிடு
கூந்தல் நதியின்
மதகுகளைத்
திறந்து விடு
உன் இடை வரை
கூந்தல் மதலையை
நடை பயில விடு.
- தவிப்பு
வண்ணத்துப்பூச்சியின் நிழலும்
வண்ணமிழந்துதான் விழுகிறது
வண்ணங்கள் பலவற்றைக் கண்டாலும்
விழிகளின் வண்ணங்கள்
கருப்பும் வெள்ளையும் தான்
நிழல் வண்ணங்களைத்
தொலைத்து விட்டுத் தவிக்கிறது
பிம்பம் வண்ணங்களைச்
சுமந்து கொண்டு தவிக்கிறது
நிஜம் நிழலையும் பிம்பத்தையும்
தவிர்க்க முடியாமல் தவிக்கிறது.
Courtesy : Unknow Artist