குட்டிகளைத் தேடும்
தாய்ப் பூனையாய்
தவிக்கிறது மனசு
உள்ளுக்குள் பலமுறை
மூர்ச்சையாகிறேன் தயரதனாய்
கைபேசியெடுக்க ஒரு நிமிடம் தாமதமானாலும்
தூசி விழுந்த கண்களாய் துடித்துப் போகிறேன்
வார இறுதியில் வந்து போனாலும்
மீதி நாட்களைத்தான் எண்ணுகிறேன் தினமும்
வாசலில் கையசைத்து வழியனுப்பி வைத்தவன்
விடுதியறையில் விட்டு விட்டுத்தான் உறங்குகிறேன்
பள்ளிப் பேருந்து கண்ணை விட்டு
மறைந்த பின்பும்
வந்து விட மாட்டானா என்று
வாசலிலேயே நின்றுகொண்டிருக்கிறேன்
‘விடுதி போதும்ப்பா, வீட்டுக்கு வந்துடு’
நான்கு வாரங்களாய்
மிக சத்தமாகச் சொல்கிறேன்
மனசுக்குள்