cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 24 கவிதைகள்

காப்பாள்


நிரம்பி வழியும் கட்டைப் பைகளில்
ஒன்றை
கைப்பிடியை நேக்காகப் பிடித்து
இரண்டாவது படிக்கட்டில் அமர்த்திவிட்டு,
வேகவேகமாக இறங்கி
அந்தப் பையையும் தூக்கிக்கொண்டு
கண்டக்டரைப் பார்த்துத் தலையாட்டிச் சிரித்தவன்
எஸ்.எஸ்.நகருக்கு ஆட்டோ பிடிக்க
பழக்கமான ஸ்டாண்டுக்கு நடக்கிறான்.
பத்தடி நடந்தவுடன்
சுண்டி இழுக்கிறது
‘சீனிவாசா போளி ஸ்டால்’ கலவை மணம்,
கடையைத் தாண்டிப் போனவன்
திரும்பி வந்து
பார்த்துப் பார்த்துப் பலகாரம் வாங்குகிறான்.
புதுத் துணி இருக்கும் பையில் வைத்துவிடாமல்
கவனமாகக்
காய்கறிப் பையில் பதுக்கி வைக்கிறான்.
‘இருவது நிமிசந்தானே.. நடந்துக்கலாம்’
ஆட்டோவைத் தவிர்த்துவிட்டு
தீபாவளியை இரண்டு கைகளில் ஏந்தி நடக்கிறான்
நல்லதங்காளின் தமையன்.

**

பெருவளாகத் தரைத்தளத்தில்
தானியங்கிப் படிகளின்
காவலுக்கு நிற்கும்
நீலாக்காவின் சுட்டு விரலை
தலைக்கு மேலாக எக்கிப் பிடித்து
பாதவிரல் நுனியில் நின்று
மஞ்சள் கவுன் குடைவிரிக்க
சுழன்று சுழன்று ஆடுகிறாள்
பெரிய திரையில் ‘பாலே’ பார்க்கும்
நல்லதங்காளின் பொம்மி.

**

அண்ணன் வரும் நேரம்
பள்ளி முடிந்து
மூத்தவன் வீடு திரும்பும் நேரம்
பொட்டலத்தைக் கொண்டு கொடுக்கத்
தேவைப்படுமென்று
செயலி அறிவிக்கும் நேரம்
ஒன்றுக்குள் ஒன்றாகக் கணக்கிட்டபடி
பொம்மியை அள்ளிக்கொண்டு
ஸ்கூட்டி நோக்கி ஓட
ஸ்விக்கி சட்டை அணிந்து
உணவு கனக்கும் முதுகுப் பையுடன்
இறங்கும் தானியங்கிப் படிகளைத்
தோற்கடித்துத் தாவி வருகிறாள்
நல்ல நல்லாள்.


கவிதைகள் வாசித்த குரல்:
தென்றல் சிவக்குமார் 
Listen On Spotify :

About the author

தென்றல் சிவக்குமார்

தென்றல் சிவக்குமார்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website