-
வாசித்திருக்க வேண்டாத புதிர்களினூடே..
உணரப்படுவதற்கோ கேட்கப்படுவதற்கோ குறைந்தபட்சம்
சில பொழுதுகள்
தவறவிடுவதற்கோ தொலைந்துபோவதற்கோ அதிகபட்சம்
ஒரு நம்பிக்கை
இம்முனையிலிருந்து அம்முனை வரையில் நீண்டிருக்கக் கூடிய
பயண தூரமோ
கைவசம் ஒப்படைத்திருக்கவில்லை ஏற்புடைய காரணத்தை
மழைத்துளிகளைத் தாங்கிப்பிடித்து வைத்திருந்து காற்று வீசும்போது
விசுறுகிற கிளைகளின் அன்பை
விடியலுக்கு முந்தைய யாமங்களில் கனவு காண்கிறேன்
பச்சிளந்தளிர் பாதைதோறும்
இரு மருங்கிலுமாய் துவண்டிருந்தது
எவ்வப்போதும் அடையமுடியாத மௌனம்
இக்கணம் வரை
நீங்கிட மறுக்கும் இருளென இறுக உதடுகளை தைத்துவிட்டிருக்கிறது
நம்மிடையே
உச்சரிக்கப்படாத அர்த்தம்
****
-
விரைந்து வந்ததோடல்லாமல்..
கண்ணாடியிலிருந்து முகம் தாழும் கோமாளியின் கைவிரல் நகங்களை
உற்றுப் பார்க்கிறேன்
உழைப்பின் நிறம் பிசுபிசுத்து அடர்ந்திருக்கிறது
ஓர் அயர்வை
தீராத கவலைகளின் பதரில் பற்றிக்கொள்ளும் நெருப்பு
எரித்து தீய்த்திட
அகன்று கிடக்கிறது துரோகத்தின் காய்ந்த நிலம்
காயத்தோடு திரும்பிவந்துவிட்ட அசிரத்தையில் மிச்சமுள்ள நினைவுகள்
கசடுகளாகி கரைகின்றன மனத்தின் புழக்கடையில்
ஆங்கே
முளைத்திருக்கும் நஞ்சின் நிறமூறிய கள்ளப் பூக்களைப் பறித்து
வாகை சூட வாய்ப்பதில்லை மீச்சிறு பொழுது
சலசலப்புடன் பெயர்த்திட விருப்பமில்லாத அமைதியை
கிடப்பில் போட்டுவிடலாமென
ஆழமாகத் தோண்டிக்கொண்டிருக்கிறேன் நேற்றைய பரவசத்தை
****
-
பாதி கிழிந்த இரசீதின் பழைய கார்பன் காபி என..
உள்ளதை உள்ளதுபடி ஏற்றுக்கொள்ள
ஒரு வார்த்தைக் கடனை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது
அறிவு கெட்டு அழுகி நாறிக்கொண்டிருக்கும் காட்சிகள்
தெளிவில்லாத பிசுக்குகளோடு கனவுக்குள்ளேயே தூர்ந்துவிடுகின்றன
அப்புத்திசாலித்தனத்தைப் பதப்படுத்த உதவிடும் பொருட்டு
நவீன சாதனங்களை மனம் தஞ்சமடையும் நியாயம்
ஏற்புடையதாக இல்லை
மறுஅடகு வைத்து மீட்பதற்கு அவலங்கள் ஏராளம் இருந்தபோதும்
கைவசம் இருக்கும் அவமானங்கள் உரசி பார்க்கக் கூட
லாயக்கற்றுப் போய்
பை கனக்கிறது கேவலமாய்
ஒரு வார்த்தைக் கடனுக்கு ஈடாக எதையும் எடுத்து வைக்க முடியாமல்
பல்லாயிரம் பக்கங்களை வாசித்த வாய்
கோணிக்கொள்கிறது
பயனற்று
உள்ளதை உள்ளபடி என்றே
ஊடறுத்து திரண்டு புரளும் நாட்களின் போக்குகளோடு
இருப்பின் மௌனத்தில் அசையும் கிளைகளில்
சும்மாவே நகர்ந்துவிடுகிறது
ஏதோவொன்று
****
-
க்யூபிஸ கோடுகளில் அசையும் கொம்புகள்
எந்த நீல நிறமும் இல்லாதபோது சிகப்பை பயன்படுத்துவேன்
என்று சொன்ன பிகாஸோவை
கைப்பிடித்து மெல்ல அழைத்துப் போன மூத்திர சந்தில்
எலும்பும் தோலுமாக நின்றிருந்தது ஒரு வண்டிமாடு
இதற்கு முன்னே கண்டிராத வியப்பில்
அவருடைய நரைத்துவிட்ட புருவ மயிர் பிசிர்கள்
இடவலமாக அசைந்து மீண்டன
உடல்களில் தோன்றும் உழைப்பின் கோடுகளை பிரதியெடுப்பதற்கு
இன்னும் எத்தனை நிழல்கள் தேவைப்படும் பிக்காஸோ
உலர்ந்த வைக்கோல் தாள்களை அவை நோக்கமற்று மெல்லும்போது
வான்காவின் மஞ்சள் என்பது வெறும் நிறமல்ல
பசி என்கிறேன்
நீங்கள் சிரிக்கிறீர்கள் பிகாஸோ
பழைய சைக்கிளின் ஹாண்டில் பார் மட்டுமே
ஸ்பெயின் தேசத்து எருமைக் கொம்பின் உருவகமாக மாறுமா
வண்ணாரப்பேட்டை வண்டிமாட்டின் குளம்புகளில் அடிக்கப்பட்டிருக்கும்
இரும்பு லாடத்தைக் கழற்றி உங்களுக்கு பரிசளிப்பேன்
அதில் மாநகர வீதிகளின் பாரம் அழுந்தும் ஓசை கிறீச்சிடுவது கேட்கிறதா
என்பதை
உங்கள் பிரம்மாண்ட கேன்வாஸில் கிறுக்கித் தருவீர்களா பிக்காஸோ
இன்னும் விடிய மறுக்கும் இந்த முதல் வெளிச்சத்தின் முகத்தில்
வானம் கரைத்திடக் காத்திருக்கும் நிறம்
நீலமா சிகப்பா என்பதை
அப்புறம் வேடிக்கைப் பார்க்கலாம்
அட
இப்படி வாருங்கள்
முதலில் ஒரு பிளாக் டீ அருந்தலாம்
Courtesy -Art : Unknown Artist
மிகவும் அருமையான வரிகள்