cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 24 கவிதைகள்

மலர்விழி இளங்கோவன் கவிதைகள்


  • வாலறுந்த நன்றி

மங்கிய வெண்மையில்
படர்ந்த கரும் பொட்டுகளுடன்
தெரு முனையிலிருந்து
ஓடி வந்து முகம் நோக்குகிறது
வாலறுந்த நாய்க்குட்டியொன்று

சிறு ரொட்டித்துண்டு அன்பினை
கண்களில் தேக்கி
வாலுக்குக் கடத்துமது
தொடர்பு எல்லை துண்டிக்கபட்ட
தன் வாலாடாத நன்றியை
பிட்டத்தில் சுருக்குகிறது
இயலாமையோடு

என் கால் வருடிய வாஞ்சையில்
ஈரம் படர்த்தி
முகம் நோக்கும்
அக்குட்டியில் ஆடுகிறது
அரூப வாலொன்று

தொடர் நாட்களில்
நெருங்கித் துள்ளும் அதற்கு
தினமொரு வண்ணமாய்
வால் பொருத்துகிறேன்.

பஞ்சுமிட்டாய் மணியொலி
கடந்த பொழுதொன்றில்
பேரழகாய் வந்து நிற்கிறது
வெள்ளையும், கருப்பும் கலந்த அதனுடலில்
பஞ்சுமிட்டாய் வண்ண வாலாட!


சிட்டுகளின்
ஆயிரம் கூடுடை
பெருந்தருவென
நகர்ந்து வருகிறது
பள்ளிப் பேருந்து
சாலையெங்கும் நிறைகின்றன
கெச்சட்டங்கள்


  • நீர் மேல் மிதக்கும் வானம்

வானத்தின் மீது தன் பாதங்களை
பூனையின் மிருதுவோடு பதித்தவள்
பஞ்சுப்பொதி மேகங்கள் கலைந்திடாமல் காலகட்டித் தாண்டுகிறாள்.

தடுமாறி விழுந்தவளை ஏந்திக் கொண்ட நீர்
தன் குளிர்மையில் குளிப்பாட்ட
நீர் மிதந்த மேகங்கள்
முழங்கால்களைக் கட்டியணைத்து
அவளை மேயத் தொடங்குகின்றன.

கால்களை உதறிக்கொண்டு
காற்பந்தென அவள் எத்திய மேகம்
துளித்துளி நீர்ச்சுழிகளாய் அலைகின்றன
அவளின் நீர்வெளியில்.

அருகினில் விழுந்து சிரிக்கும்
சூரியனின் மீதும்
நீரள்ளித் தெளிக்கிறாள்
குவிந்த கைகளில் வழியும் செல்லச் சினத்தோடு.
பயந்தோடுவதாய் பாசாங்கிய சூரியன்
மீண்டும் நெருங்கி
தகதகத்துச் சிரிக்கிறான் .

அந்நேரமாய் உதடு குவித்து முத்தமிட்ட
மீனின் ஈர முத்த சலனத்தில்
சுழலும் கனவின் வளையங்களாய்
அலை பாயும் சூரியன்.

சூரியனை முத்தமிட்ட மீன்
நதியலைந்து அவளின் நாணத்திலும்
ஒரு முத்தத்தைப் பதிக்கிறது.

நதியாடிக் கரையேறியவள்
சொட்டிக் கொண்டே செல்கிறாள்
முத்தத்தின் உலராத துளிகளை


கவிதைகள் வாசித்த குரல்:
  மலர்விழி இளங்கோவன்
Listen On Spotify :

About the author

மலர்விழி இளங்கோவன்

மலர்விழி இளங்கோவன்

இவர் சிவகங்கை மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிங்கப்பூரில் பதினைந்து ஆண்டுகள் புலம் பெயர்ந்து வாழ்ந்த பின்; தற்போது திருச்சியில் வசிக்கிறார். கோவையில் உயிர்வேதியியல் பயின்றவர். மூன்று கவிதைத் தொகுப்புகளையும் (கருவறைப் பூக்கள், அலை பிடுங்கிய சொற்கள், கடல் சூழ் கவிதை), ஒரு சிறுகதைத் தொகுப்பையும் (சொல்வதெல்லாம் பெண்மை) வெளியிட்டுள்ளார். கவிதை, கதை என இரு பிரிவுகளிலும் சிங்கப்பூர் தேசியக் கலைகள் மன்றத்தின் 'தங்க முனை விருது' வென்றவர். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழா போட்டியின் பரிசுகளை மரபுக் கவிதைகளுக்கும், சிறுகதைகளுக்கும் பெற்றுள்ளார். சிங்கப்பூர் கல்வி அமைச்சின் தமிழ் இலக்கியத்திற்கான பாடத்திட்டத்தின் 'இலக்கியச் சாரல்' லில் இவர் கவிதை இடம்பெற்றுள்ளது. கவிமாலையின் 'சிறந்த கவிதை நூலுக்கான தங்கப் பதக்க விருது ‘அலை பிடுங்கிய சொற்கள்' நூலுக்காக வென்றார். அதே நூல் 'சிங்கப்பூர் இலக்கிய பரிசு’க்கும் தேர்வு பெற்றது.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
பண்பொளி

மூன்றும் முத்துக்கள்.. வாலறுந்த நன்றி மனதை தொட்டது.ஆயிரம் கூடுடை பெருந்தரு அழகிய சொல்லாடல்.அருமை! செம்மை!. அழகு என் கவியே. 💐💐🔥🔥🌺🌺

You cannot copy content of this Website