1.
எத்தனைத் தட்டினாலும்
திறக்கவேயில்லை
என புலம்பும் வேளையில்
என் சன்னல் கண்ணாடியைத்
தட்டிக் கொண்டிருந்தது
அப்பொன்குருவி.
திறக்கலாமா?
என யோசித்தவேளையில்
அதனழகை, அதனலகைப்
பார்க்கப் பார்க்க
ரம்யமான அதனருவை..
திறந்தால் பறந்துவிடுமோ?
தயங்கி நிற்கிறேன்.
இப்படியெண்ணித்தான்
நான் தட்டிய கதவை
நீங்கள்
திறக்கவில்லையோ?
2.
எங்கோ ஒரு மலர்விழ
ஏதோ ஒரு ஒலி இசைக்க
ஒரு கண்சிமிட்டல் கூட
நிமித்தமென
மனமிளகும் கணத்தில்
உள்நுழைந்து
உயிர்வாதை கொள்ள…
உனக்கே உனக்கென
ஒருபிடி
இலையோரத்தில் இப்போதும்.
உதற முடியாத
ஒட்டுண்ணி நினைவுகளாய்
உறுத்தி துருத்தி…
எப்போது வைப்பது?
எப்படி வைப்பது?
ஒரு முற்றுப்புள்ளிக்கு
ஏங்குகிறது
உள்ளமும் விரல்களும்.
3.
ஆவும் மாவுமாய்
அள்ளிக்குடித்த
சேற்றுநீரென
கலங்கி கிடக்கிறது.
அரசல் புரசலாய்
அலர் தூற்றிய
வாய்களுக்கு
அவலள்ளித் தந்தபின்னும்
அடங்க மறுக்கிறது
நாணமற்ற மனசு.
இருக்கிறதா?
இல்லையாவென
அறியாமல்
வழக்கம் போல்
இரைந்து கொண்டிருக்கிறது
இமிழ்திரைப் பெருங்கடல்.