cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 2 கவிதைகள்

கண்ணன் கவிதைகள்

கண்ணன்
Written by கண்ணன்

  • ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்

 

கண்களைக் குறுக்கிப்பார்த்த

அண்ணன் கண்டு பிடித்து விட்டான்

உள் நுழைந்தவுடன்

கடைசி வரிசையில்

புடவைத்தலைப்பில்

வாய்மூடிக் குலுங்கிய அண்ணி

சொன்னார்

தூரத்துச்சொந்தம்

அண்ணன் மகள் சொன்னாள்

ஆறாம் வகுப்பு வரை

இவர்தான் டீச்சர்

மேலாளர் அம்மா சொன்னார்

மூணு பொண்ணுங்க,

டாக்டர் பொண்ணுமட்டும்

வாரம் ஒருமுறை 

வந்து போவார்

வாயினுள் ஊட்டியது

வழிந்தபடியிருக்க

பிள்ளைகள் பிள்ளைகளென

ஓடியஜீவன் வதங்கிப்போய்

வாடிய கத்தரியாய்

கைபிடித்துச் சென்றவர்கள்

கைஉதறிச்சென்றதால்

ஒரு முன்னாள் ஆசிரியர்

மூலையில் குப்பையாய்

ஏனிப்படி எனக்கேட்பின்

விடையேதுமில்லை

எல்லாக் கேள்விகளுக்கும்

விடையுண்டா என்ன?


  • வழிகாட்டி நெறிமுறைகள்

 

விசேஷத்திற்கு நீங்கள்

அழைப்பிழிருந்து தயாராக வேண்டும்

மனைவியை மட்டும் அழைத்தால்

கணவர் கோபித்துக் கொள்ளக்கூடும்

அழைப்பிதழ் அடித்தால்

பெயர்கள் முக்கியம்

ஒரு பெயர் விடுபடினும்

பூகம்பம் நிகழக்கூடிய

சாத்தியம் அதிகம்

பக்கத்து வீடெனில்

நேரில் சென்றல் கட்டாயம்

சமையலுக்குச் சொன்னால்

ஒரு சாப்பாட்டின் விலையை

கட்டாயம் கேளுங்கள்

பந்தலிட்டால்

மழை நாளில் ஜாக்கிரதை

வருபவர்களை வரவேற்கவும்

புகைப்படத்திற்கு நிற்கவும்

ஓடப்பயிலுக

பரிமாறுகையில் 

சாதத்தின் அளவு 

சரியாக விழவேண்டும் இலையில்

சாம்பார் ஊற்றுகையில்

மிகவும் கவனம் தேவை

சாப்பிடுபவர் கையில் ஊற்றிவிட

சாத்தியம் அதிகம்

ரசமும் மோரும்

இலை மீறக்கூடாது 

எப்போதும்

உதிர்க்கும் வார்த்தைகளில்

மிகக் கவனம் தேவை

உங்களின் நகைச்சுவை

யாரையும் காயப்படாமல்

காப்பாற்றுதல் உங்கள் பொறுப்பு

அறிவுரைகளை அலட்சியப்படுத்துதல்

ஆபத்தில் முடியும்

இணையர் சொல்லிற்கு

தலையாட்டி விடுதல்

உடம்புக்கு நல்லது

மாதக் கடைசி

பணத்திற்கு என்ன செய்வோமென

எவருக்கும் தோன்றாது

கடைசியாக

உடுக்கை உங்களைக்

கைவிடக் கூடும்

வேஷ்டி நழுவாமல் காப்பது

உங்களின் தலையாய கடமை.


 

  • ஒரு அறை கொண்ட வீடு

 

காலையில்

ஒரு பால் காய்ச்சும் விசேஷம்

நெருங்கிய சொந்தம்

தட்ட முடியவில்லை

ஏசி ஏதுமில்லை

மாடுலார் கிச்சனில்லை

ஒற்றை அறைதான்

எல்லாமே அதில்தான்

குழந்தைகள் பெரிதானால்

மாற்ற வேண்டும் வீடு

நமக்குத்தான் பிரச்சினை

சிட்டுக்குருவிக்கென்ன

இருக்கவே இருக்கிறது

பெருங்காடும்

விரிவானமும்


 

About the author

கண்ணன்

கண்ணன்

சேலம்-தாரமங்கலத்தை சார்ந்த கண்ணன் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரின் முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தாக தெரிவிக்கிறார். சமீப காலங்களில் நுட்பம்- கவிதை இணைய இதழிலும், செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற இதழ்களிலும் இவர் எழுதும் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.
'கோதமலை குறிப்புகள் ' எனும் தலைப்பில் இவரின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website