cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 25 கவிதைகள்

விஜி பழனிச்சாமி கவிதைகள்


ஒப்பற்ற கருப்பு வெள்ளையில் ஒளிந்து கொள்ளும்
சிறுமியின் கைவிரலில் வரைந்துகொண்டு இருக்கிறது
ஓர் அடர் ஓவியம்..

“வான்கோ”வின் விரல்களில் கசியும்
கூரிருளின் பால்வீதிகளை
அக்கோடுகள் நிரப்பிக்கொண்டு இருக்கிறது.

நீருக்குள் நீந்தும் மீன்களின் கரிய இருட்டில்
வண்ணங்களைத் தவிர்க்க நினைக்கிறது
என்னின் காயல்.!

ஒரு சொல் கூட இல்லாத மௌன மொழிகளை
அதன் நிசப்தங்களை
அதன் அதிர்வுகளை
வெள்ளைத் தாளில் நிரப்பிக்கொண்டு இருக்கிறது
ஒரு பென்சிலின் கூரிய முனை..!

மர நிழலின் நடந்துகொண்டு இருக்கிறேன்.
தனித்த கனவுகளைக் கொண்டே,
அதன் மயக்கும் தன்மையைக் கொண்டே,
விளக்குகள் ஆழ்ந்து உறங்கும் நடுநிசியில்
ஒரு சிதிலமடைந்த
பொற்கோவில் தனித்தே நடனம் ஆடச்செய்தன
அதன் இரு கண்கள்,
மிகச் சரியாக இருமுனைகண்கள்.

என் புராதனச் சடங்குகளிலிருந்து வெளியேறி.
நடனம் புரியும் ஒரு மகத்தான கற்சிலைபோல்..

ஆதியில் சிதிலமடைந்த கண்களைக் கொண்டே
என்னாலான எல்லாவற்றையும்
மீன்படலம் மீது போர்த்திக்கொண்டே
படகின் சிறகில் பறக்கிறேன்

அங்கே செம்மஞ்சள் ஒளியில் கோடுகள் மறைந்துகொண்டன..
விண்மீன்கள் அதிர்ந்தன.
மிகத் துலக்கமான ஒளியில்
கருப்பு-வெள்ளை அங்குக் காணக் கிடைக்கவில்லை..

நதி மீதொரு நீலப்படிமங்கள்
வழிந்தோடும் பொழுதொன்றில்
மூன்றாம் பிறை
மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டு இருக்கிறது.

ஆற்றுப் படுக்கையில் குவிந்திருக்கும்
கூழாங்கற்களின் காலங்கள்
அதன் ஆயுள் ரேகை
அவளின் ஆதிநிலத்தை நமக்கு அறிவிக்கிறது..

18-ம் நூற்றாண்டின் வரைபடங்களையும்
அதில் நழுவிக்கொண்டு இருக்கும் நிலப்பரப்பின் பெண்ணையும்
ஒரே மூச்சில் உணர்ந்தவர் யாரோ?
அவனே இக்கவிதையை வாசிப்பவன் என்று அறிக.!

மேலும் இரு கண்களில் ஒளிக்குத்திருக்கும் நிகழ்காலத்தை
நீலத்தில் கடத்திக்கொண்டு நகரும் புனைவை
அதன் ஆதி இருண்மையை
காதலாக பயில தெரிந்தவள் அவள்.

முற்றுப்பெற வனத்தின் விரிசலில்
வேர்விடும் வானத்தின் மீது போர்த்தியிருக்கும் நீலம் !
ஒரு போதும் மாறாது என்பது அவளின் நம்பிக்கை!

ஏதொன்றில் மரணிக்க இயல
பறவையின் இசை ….
தன்னையும் தனக்குள் புதையுண்டு கிடத்தியிருக்கும்..,

அவள் வருகை என்பது …

புல்வெளியில் ஒற்றை முனையில் கிடத்தியிருக்கும்
பனிதுண்டத்தின் அதீத காட்சி.!

நழுவிக்கொண்டே இருக்கிறேன்
அவள் கனவின் மீது என்பது
இன்னும் சொல்லவில்லை அவளிடம்….

உன் யவ்வனத்தின் உன்னதங்கள்
திறந்துகொள்ள ஆரம்பித்துவிட்டன
எனது பிரவேசத்துக்குப் பிற்பாடு ஆரம்பித்துவிட்டன

உன் தயக்கங்கள் ஒவ்வொன்றையும்
நெகிழவிடுகிறாய்
அவை பறவைகள் போல
உன்னிலிருந்து பறந்து போகின்றன

ஊற்றுக் கண்களின் திறப்புகளில்
பிரவாகம் மையம் கொள்ள
உன் சுனைகளில் தித்திப்பு
கூடிக்கொண்டே போகிறது

மானின் மிரட்சியோடு வந்தவனை
மேலெழும்பி மிதக்கும் உன் பவித்திரம்
புலி செய்கிறது

முகடுகளின் மென்மையிலும்
வளைவுகளின் தீவிரத்திலும்
நீர்வழி படும் புணை போகலாகிறேன்

கசிந்து பரவுகிற உன் நீர்மையில்
மெல்லமெல்ல என் வேர் மூழ்குகிறது
தடாகமாகத் தளும்பும்
உன் ரகசிய கண்ணிகளில்
சிக்கிக்கொண்டு
சித்தியடைகிறேன்.

இதோ இந்த
புராதன ரயில் நிலையத்தில்
அமர்ந்திருக்கிறேன்

இரட்டை ஜடை பின்னலில் ஒருவள்
சிவந்து கனிந்த
புன்னகையுடன் கடக்கிறாள்

தூரத்தில் கவனித்திருக்கிறாள் போல,
மிகத் தூரத்தில் மிக மிகத் தூரத்தில்
ஒளி கொப்பளிக்கும் அந்த அரக்கு கண்களில் மின்னிய
ஒரு சுடர் என்னை அவள் அறிந்திருந்தாள் என்று
அறிவித்துச் சென்றது

அவள் கடந்த அந்த நொடி
தூரத்தில் ரயிலின் அறிவிப்பைச் சொன்னது அதன் ஒலி..

மலைகள் சூழ், மனிதர்களற்ற
இந்த நிலையத்தில் அவள் மட்டும்
பின் நானும்…

கனிந்து கனிந்து அருகே வருகிற
நான் செல்லும் இடம் விலகி விலகி
நெருங்கி அழைக்கிறாள் அவள்.

மிகப் பழமையானவள் போல

இரு நூற்றாண்டு இருக்கலாம்
ஆனாலும் இளமை தொலையாதிருந்தாள்

இம்மலையை குடைந்து உருவாக்கிய
இரும்பு தடத்தில் கனிகள் தேடியெடுத்து
விளையாடும் சிறுமியாக இருந்தாள்..

பின் பட்டுப்போன இந்நிலத்தில்
தனியாளாக இணைத்துக்கொண்டாள்.

இக்கதையை நான் படித்து முடித்ததும்
புத்தகத்தை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்தேன்.
என் எதிரே கண்ணாடி பாதரசத்தில் என்னைப் போலவே அவள் முகம்.

சட்டென்று தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளும்
சிற்பத்தின் நினைவு எழுந்து மறந்தது.

ரயில் நின்று இருந்தது

ஒரு பயணி போல அவள் வேறொன்றுக்குக் காத்திருந்தாள்

மேகம் தன் கருப்பையை நிறைத்து புடைத்துக் கொண்டிருந்தது
எந்த நொடியிலும் மழைபொழியலாம்
பறவைகள் தங்கள் இடம் தேடிப் பறந்தது
மிகத் தூரத்திலிருந்து பார்த்தேன்
மிக நீண்ட ரயில் பெட்டிகளில்
அவள் மட்டும் ஒருத்தியாகத் தனித்து ஏறினாள்..

ஒரு ஓவியத்தின் கடைசி நிறங்களை
அந்த ரயில் நிலையம் பதிவுசெய்துகொண்டு இருந்தது…


Courtesy -Art : saatchiart.com

About the author

விஜி பழனிச்சாமி

விஜி பழனிச்சாமி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website