cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 25 கவிதைகள்

மஞ்சுளா கவிதைகள்


1. நினைவோசை

ஒரு ஊரிலிருந்து
இன்னொரு ஊருக்கு
தனியொருவனின் இன்பமாய்
வாழ்வை ருசித்து ருசித்து கடந்து போகிறது ரயில்

ஜன்னல் கம்பிக்கு அருகில்
சிறுவன் ஒருவனின் பார்வையில் சிக்கி
பறந்து விடும் ஒரு பறவையை
பின் தொடர முடியாமல்
தவிக்கும் நேரம்
அவனை விரல் தொட்டு மீட்டெடுக்கிறேன்

தட தடக்கும் ஓசையை
இருவருக்கும் இடையில் ஒத்திசைக்கிறான்
இசைஞன் ஒருவன்

கொஞ்சம்
சில்லறைக் காசுகளுடன்
நகர்ந்து போகும் அவனிடம்
கொஞ்சம் பாடச் சொல்லிக் கேட்கிறேன்
பதிலுக்கு
என் செவிகளை மட்டும்
சிறிது நேரத்திற்குக் கடனாகக் கேட்கிறான் அவன்

சிறிய வயதின் ஞாபகங்களுடனும் கதைகளுடனும்
எங்களுக்குக்கான பொழுதுகளை உயிர்ப்பித்தபடி
விரைந்து செல்கிறது ரயில்

காலத்தின் எந்த ஒரு நொடியையும் மீட்டெடுக்கும் ரயில் பயணங்கள்
என்னை மேகத்தின் அருகே
பறக்கும் பறவையாகவும்
பட்டாம்பூச்சியைப் போல்
சிறகடிக்கும் சிறுமியின் மனதாகவும் மாற்றுகிறது

காலம் மெல்ல மெல்ல
ரயில் பயணம் போல் விரைகிறது

பயணிகள் அவரவர் இடம் தேடி அமர்ந்து கொள்கின்றனர்
இசைஞன் பின் பாட்டுப் பாட
தட… தடக்கும் ரயில் சத்தம்


2. விழித்திருப்பவனின் கனவு

சூரியனுக்குக் கீழே எல்லாவற்றையும்
படம் பிடிக்க நினைக்கிறாள்
நவீன யுவதி ஒருத்தி

அவளைப் பிடிக்க
வெயில்
தன் வெள்ளை மொழியை
அவள் மீது பொழிகிறாள்

ஒரு குடையை எடுத்து
விரித்து ஒளியை மறைக்கும் அவளை
யாரோ ஒருவன் ஒளிந்திருந்து கவனிக்கிறான்

அவனிடம் வெயில்
ரகசிய குறிப்பொன்றை
அனுப்புகிறது

வீட்டுக்குத் திரும்பிய அவனிடம்
அம்மா கேட்கிறாள்
வெயிலையே தின்னு வந்தியா என்று

உதட்டுக்குள் ஒளிந்து கிடக்கும் வார்த்தையை
முற்றத்து வெயிலில் உலர்த்தியபடியே
படியேறிச் செல்கிறான்
மொட்டை மாடிக்கு

காக்கைகளும் குருவிகளும் பறந்து அலையும் வானத்தின் கீழே
மொழி அறியாத பெண்ணை
வெயில் பறவை கொத்திப் போவதை
விழிகள் விரியப் பார்க்கிறான்

கனவு கலைந்து விழித்த அவனின் முன்
தேநீர் குவளையில் இருந்து
ஆவி கிளம்பி வெளியேறிக் கொண்டிருந்தது


கவிதைகள் வாசித்த குரல்:
  மஞ்சுளா
Listen On Spotify :

About the author

மஞ்சுளா

மஞ்சுளா

மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.

இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.

மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.

“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி) வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website