- பவுர்ணமிக் கிறுக்கு.
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
என்ற பாடலை
ஒருவருக்கு
பெயராய் வைத்திருந்தேன்.
வைத்தபோது இருந்த வயதில்
தற்போது அவரில்லை.
பிரியமும் கூட
மெலிந்து விட்டிருக்கிறது.
ஒரு நிலா நாளின் மாலைப்பொழுதில்
எப்.எம்-மில்
சந்தனக்காற்றே ஒலித்த போது
பழைய வயதிற்குச்
சென்று திரும்பியதை அவர்
போன் செய்து தெரிவித்தபோது
வெளி முழுவதும்
சந்தன நிறம்
சந்தன மணம்.
- நீல நிற பாரகான்.
பேருந்து நிறுத்தத் திட்டில்
அமர்ந்திருந்தவர்
நிழற்குடைச்சுவரின்
கோட்டோவியத்திடம்
முன்பெல்லாம்
மூணு வேளைச் சாப்பிட்ட
காலம் ஒன்றிருந்தது
எனப் பொருள்படும்படியாய்
முணுமுணுத்தது காதில் விழ
குடித்திருக்கிறாரோ என்ற
சந்தேகத்தோடு
அவரைப்பார்க்க
இவன் திரும்பினான்
அரை வயிற்றுக்காரனுக்கு
மிகுந்த சுமை வேண்டாமென
நல்ல தேய்மானம் கண்டிருந்த
ரப்பர் செருப்பே
முதலில் கண்ணில் பட்டது.
- திருவிழா.
நான்குப் பெட்டிகள் கொண்ட
ரங்க ராட்டினத்தில்
வேறு வேறு பெட்டியில்
அமர்ந்திருந்த
நீயும் நானும்
சுழற்சியின் விளையாட்டில்
அவரவர் கைக்குட்டைகளை
வைத்தோம்.
என்னுடையதை நீ எடுத்தாய்.
பீடி குடித்து
ஓயாது இருமும்
நெஞ்சுவலிக் கிழவனார்
இன்னும்
ஓரிரு
சுற்றுகள் சுற்றியிருந்தால்
போதுமானதாயிருந்திருக்கும்
நம்முடையதை
நான்
எடுக்க.