- மொழி
உரையாடல்கள்
என்னைத்
தொல்லைக்குள்ளாக்குகின்றன.
எனதல்லாத வார்த்தைகளை
எப்படிப் பேசினேனென்று
ஓரிரு நாட்களுக்குப் பின்
தோன்றுகிறது.
பொய்மை கலந்தோ
புரிதல் இல்லாமலோ
பேசிவிட்டு வந்த பின்
உண்மையான என் மொழி
மௌனத்திலிருந்து வெளிவரும்போது
உறுத்தல் தொடங்குகிறது.
நான் சொல்ல நினைத்தது
அதுவல்லவென்று
மீண்டும் தொடங்குகிறேன்
இன்னொரு நாள் மெதுவாக.
இம்முறை
முடிந்த மட்டும்
மௌனத்தை நகலெடுத்துச்
சொல்லி முடிக்கிறேன்.
சொல்லில் வராத மீதம்
அப்போதும்
உள்ளிருந்து சிரிக்கிறது.
- ஒரு தற்கொலையைத் தடுத்துவிடுங்கள்…
நிராகரிப்பின் வலியைத் தாங்கிக் கொள்வதெப்படியென்று
யாராவதெனக்குச் சொல்லிக் கொடுங்கள்
நான் வேதனையில் புருவங்களை நெறிப்பதைப் பார்க்க
என்னருகில் எவருமில்லை
மனிதர்களென்னைக் கடந்து போகிறார்கள்
உலர்ந்த மாட்டுச் சாணத்தை
மிதித்து விடாமல் கவனமாகச் செல்வதைப்போல்
நண்பர்கள் நிலம் பார்த்து நடக்கிறார்கள்
என் பார்வையைத் தவிர்த்தபடி
என் கண்ணீரின் சுவையெனக்குப் பிடித்தமானதாயில்லை
ஆனாலும் அது வழிந்து கொண்டுதானிருக்கிறது
காலொடிந்துவிட்ட ஒரு பந்தயக்குதிரையைக்
கொன்றுவிடுதலைக் காட்டிலும்
வேறு நல்ல வழி ஏதாகிலும் இருக்குமென்று தோன்றுகிறது
மானுடத்தின் மீதான
நம்பிக்கை மிச்சங்கள்
அனைத்தையுமிழந்து நிற்குமென்னிடம்
ஒரு பச்சிளங்குழந்தையையாவது
கொண்டு வாருங்கள்
சிருஷ்டியின் நீலநிறத்தை
அதன் வட்டக் கண்களில் நான்
பார்க்க நேர்ந்தால்
இந்தப் பூமியிலென்னை
இருத்திக் கொள்வதற்கான காரணம்
ஏதேனுமொன்று கிடைக்கக் கூடுமெனக்கு…