- கடலோரம்..
நதிகளைக் குடித்துக்கொண்டேயிருக்கும்
கடல்களுக்கு
தாகம் தீர்வதேயில்லை.
தாகம் தீராத கடல்களுக்குள்
குதித்துக் குளித்துவிட்டுப் போகும்
நட்சத்திரங்களுக்கு
மீன்களைப் பரிசளித்து
அனுப்புகின்றன கடல்கள்.
தூரத்தில்
கடலும் வானமும்
தொட்டுக்கொண்டிருப்பதாய்ச் சொல்லும் தூரம்
எப்போதுமே பக்கத்திற்கு வருவதில்லை
கரைக்கு வந்துவிட்டு வந்துவிட்டு
உள்ளே ஓடிப்போகும் அலைகளுக்கு
கரையேறவும் தெரிவதில்லை
நடுக்கடலுக்கும் செல்லத் தெரிவதில்லை.
எவ்வளவு பெரிதாக இருந்தாலும்
ஏமாற்றிவிட்டு
கடலிடமிருந்து தண்ணீரைத்
திருடிப்போய்விடுகின்றன மேகங்கள்.
- உண்மையாகும் பொய்
குதிரை
வெகுவேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது
குதிரையின்மேல்
யாரோ உட்கார்ந்திருப்பதாய்
நீங்கள் சொல்லும் பொய்யை
நான் நம்பவில்லை
இன்னொரு பொய்யையும்
நீங்கள் சொல்கிறீர்கள்
குதிரை பசியால் ஓடுகிறதென்று.
குதிரையைப் பற்றி
ஏராளமான பொய்களை நீங்கள்
சொல்லிக்கொண்டிருக்கையிலேயே
குதிரை அதே வேகத்துடன்
திரும்ப ஓடி வருகிறது
குதிரையின்மேல் யாருமில்லை
குதிரையைப் பார்த்துவிட்டு மறுபடியும்
நீங்கள் பொய் சொல்கிறீர்கள்
குதிரையின்மீது யாரோ அமர்ந்திருப்பதாய்.
- சலனங்களில்..
தெருவோரத்தில்
தூக்கி வீசப்பட்ட
மதுப்புட்டிகளுக்குள்
புகுந்துகொண்ட எறும்புகள்
தப்பித்துக்கொள்கின்றன
திடீரெனப் பெய்யும் மழையிலிருந்து.
மழையை எதிர்பார்க்காதவர்கள்
கூரைகளுக்கடியில்
ஒதுங்கி நிற்கிறார்கள்
வராத நேரத்தில் வந்த மழையைச் சபித்தபடி.
விற்காத குடைகளை
ஒரு முறை ஏக்கமாய்ப் பார்த்துவிட்டு
நம்பிக்கையற்று மழையைப் பார்க்கும் வியாபாரி
எழுந்து சென்று கைகளை வெளியே நீட்டி மழையை ஏந்தி
முகம் துடைத்துக்கொள்கிறான்.
குடையற்று நடந்து செல்பவர்களின் மீது
பெய்து கொண்டிருக்கும் மழை
ஒதுங்கி நிற்பவர்களைப் பார்த்து
தனக்குத்தானே சிரித்துக்கொள்கிறது.
- அறியாமை
கடலிடம் தண்ணீர் இருக்கிறது
உப்பு இருக்கிறது
மீன் இருக்கிறது
ஒவ்வொரு முறை
கடலுக்குப் போகும் போதும்
பிரியங்களில் நெகிழும் கடல்
ஏதேனுமொன்றை எடுத்துப்போகச்சொல்லி
தன்னை நீட்டுகிறது
எனக்குத் தண்ணீர் வேண்டாம்
உப்பு வேண்டாம்
மீன் வேண்டாம்
அலைதான் வேண்டுமென்கிறேன் கடலிடம்
அலையை எப்படிக்கொடுப்பதெனத்
தெரியாமல் கடலும்
அலையை எப்படி எடுத்து வருவதெனத் தெரியாமல் நானும்
சந்தித்துப் பிரியும்போதெல்லாம்
வருத்தப்பட்டுக்கொள்கிறோம்
இன்னமும்
அலையை எப்படி எடுத்துக்கொடுப்பதெனக் கடலுக்கும்
அலையை எப்படி எடுத்து வருவதென
எனக்கும் தெரியவில்லை.