- விடியல்
குளிர் தணிக்க
கொஞ்சநேரம்
கொதிக்க வைத்தான்.
நுரைத்து உயரும்
அழகில் லயிக்க
டீத்தூளுடன்
ஒரு ஸ்பூன் அன்பையும்
பிணைக்கச் செய்தவன்
ஸ்ட்ராங்கிற்காக காத்திருந்தான்
நாட்டு சர்க்கரையில் ஒரு டம்ளரும்
வெள்ளைச் சர்க்கரையில்
பெரிய டம்ளரென இரண்டு
தேயிலைத் தோட்டங்களானது
ஞாயிற்றுக் கிழமையின் விடியல்.
- செடியானவள்
நடந்தபடி இருந்தவள்
சட்டென நின்றாள்
பூ ஒன்று தன்னை
அழைப்பதாகப் பட்டது
உடனிருந்தவளிடம் கூறினாள்
உளறாமல் உடன் நடவென
இழுத்துச் சென்றவளுக்கு
உள்ளூர ஏக்கம் எழுந்தது
நமக்கேன் எதுவும் தோன்றவில்லையென
திரும்புகையில்
தோழி
செடியாகிக் கொண்டிருந்தாள்.
- அரசெனும் இயந்திரம்
ஓடிக்கொண்டிருந்த நிலவை
பார்த்துத் திரும்பியவன்
படுக்கையை அடைந்தான்
உறக்கம் கொள்ளாதிருக்க எழுந்தான்
நேற்றைய கனவு நினைவில் வர
வேர்த்து உடல் நடுங்கியது
நீர் அருந்தி
ஆசுவாசம் கொண்டும்
நடுக்கம் குறையாதிருக்க
மாத்திரைகளை உட்கொண்டான்
மயங்கிச் சரிந்தவன் எழாதிருக்க
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்
ஸ்கேனிங் இயந்திரம் தந்த தாளில்
இரண்டு பெண்கள் ஓடிக்கொண்டிருந்தனர்
நிர்வாணமாக.