- கிள்ளியெடுத்த அன்பு
மரம் நெடுகக் கிளையும்
கிளை நெடுகக்
காயும் கனியுமாய்
வாசலில் பூத்திருக்கும்
பச்சரிசி மாவுக் கோலத்திற்கு
ஒரு எறும்பையும் காணோமே என்று
விசனப்படுகிறாள்
அம்மா.
கோலத்திலிருந்து
ஒரு பூவைக் கிள்ளியெடுத்து
எறும்பிருக்கும் இடம் தேடி
கோடிழுத்து வைக்கிறாள்
தர்ஷினி.
அள்ளித் தந்த போது வராது
கிள்ளித் தந்த போது வந்து வரிசைக்கட்டி நின்ற எறும்புகளுக்கு..
கோலம் இப்போது
பத்தாத கோலமாகிறது.
- அங்கிருந்தால் இங்கே
இங்கிருந்தால் அங்கே
பொழுதோட வந்து
வாச வெளக்கப் போட்டுட்டுப் போ..
வெள்ளென கோலம் போட வரயில
மறக்காம வெளக்க அமத்திடு..
செம்பருத்தி காயாம
தெருப் பிள்ளையாருக்குச்
சாத்திடு..
சந்தனமுல்லை சிந்தாம
நீ கட்டி வச்சுக்க..
சுண்டக்கா முருங்கக்கா பறிச்சுட்டுப் போ கொளம்புக்கு.
இங்க நல்ல மழை
அங்க மழையேதும் பேஞ்சுதா
அமரகண்டான் நெறஞ்சுதா என்று..
பவளத்து மகள் சின்னவளிடம்
ஒப்படைத்து வந்ததை
இங்கு வந்திறங்கின நாளாய்
அலைபேசியிலும்
விரட்டிக் கொண்டிருக்கிறாள்
அம்மா.
தெரிந்தது தான்…
ஊரில் இருக்கையில்
என்னையும்
இங்கிருக்கையில்
ஊரையும்
இப்படித்தான்
மேய்த்துக் கிடப்பாள் அம்மா.
- நிதானம்
என் நிதானத்தின் மீது
சொல்லெறிந்துவிட்டு..
நான் நிலைகுலைந்து சரிவதற்காய்க்
காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
எழுதிக் கொண்டிருந்த கவிதையை
இப்போது
இன்னும் நிதானமாக
எழுதிக் கொண்டிருக்கிறேன்
நான்.
என்ன செய்வது..
இப்படித்தான்
கல்லெறியக் கற்றுத் தந்திருக்கிறது
உங்கள் திசைக்குப்
பதற்றத்தைப் பற்றவைக்கிற
என் நிதானம்.