- பிம்பங்கள்
உருகி வழியும் உயிரில்
சில துளிகள் சொட்டிக்கொண்டேயிருக்கின்றன
பிம்பங்களால்
உருவான
சிலதுளிகளை
துடைத்தெறிய முயற்சிக்கின்றன
அற்ப மனங்கள்
துடைத்தெறிதல் எளிதென்றால்
அனைத்துமே
நிலையற்ற ஆன்மாவின்
கூட்டங்களாகி
வீடுகள் பூங்காக்களை
நிறைத்துக்கொள்ள
நாம் வாழ்தலின் அர்த்தமின்றி
காற்றில் கூடுகளைக் கட்டிக்கொள்ள
அடிக்கணக்கில்
இடம் தேடுவது நிஜம்
- கனவுகள்
அர்த்தமானதாகவே இல்லை
என் இதயத்தை இறுக்கும் சில நினைவுகள்
ஆகாயத்தில் பறந்துகொண்டிருக்கும் கனவுகள்
என்னைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டன
எனக்குள் இழுக்க
எத்தனிக்கின்றேன்
தம்பூராவின் தந்திகளென
அறுபட்டுக்கொண்டே உள்ளது
காலம் கடந்துவிடவில்லை
ஒவ்வொரு இரவிலும்
என் பிணத்தின்மீது
விழுந்து அழும்
சில பூச்சிகள்
அந்தக் கணமேனும்
உயிர்வாழ்தல்போல
எளிதாக விழித்துக்கொள்ளும்
நம்பிக்கையை
நான்
ஏன் கைவிட்டுவிடவேண்டும்