- வேட்டை
எல்லா மலைப்பயணங்களின் பொழுதும் எங்கிருந்தோ
எப்படியோ
வந்து சேர்கின்றது
அறிமுகமில்லா வேட்டைநாயொன்று
பயணத்தின் முழுமைக்கும்
வழிகாட்டியபடி நடக்கிறது
பாறைகளில் உட்கார்ந்து ஓய்வுகொள்கிறது
இடைக்கிடை வாலாட்டவும்
அன்புடன்
முகம் உரசி முத்தம் தரவும் செய்கின்றது.
பயணம் முடிவில்
சொல்லிக்கொள்ளாமலே
விடைபெறுதலற்று
மறைந்து போகின்றது
எப்போது இல்லாமல் போனது என்பதை
யோசிக்கும் கணத்திலெல்லாம் மெல்லிய பிறாண்டலுடன்
மௌன உறுமலுடன்
மனதுக்குள் இருந்து
குரைக்கிறது
அன்பெனும் விம்பமாக.
- வனத்தாய்
அவ்வளவு இலகுவில்
கடந்து செல்ல முடிவதில்லை
அந்தத் தேக்கு மரங்களை
வீதியின் இருபுறமும் இலைகள் உதிர்ந்தும்
பட்டைகள் சிதைந்து
சன்னம் துளைத்து
எச்சமாய் நிமிர்ந்து நிற்கும்
தேக்க மரங்களை
அவ்வளவு இலகுவில்
கடந்து விட முடிவதில்லை
கார்த்திகை மலர்ந்தது.
வான்துளி முத்தத்தில்
துளிர்த்துக்கொண்டன காடுகள்
மீண்டும் பாடத் தொடங்கின வண்டுகள்.
மொட்டைக்குளத்தில் மலர்ந்த தாமரையின் பக்கத்திலிருந்து வாத்தியம்
இசைக்கின்றன தவளைகள்.
முகம் மறந்து போன
மறவர்களின்
நினைவுகளை மீண்டும் பாடத்தொடங்கின
நேசம் விதைத்த பெருமரங்கள்.
நெஞ்சத்தில் பொங்கி எழும் கண்ணீரை அடக்கி
அந்த வீதியின் இருபுறமும் புன்னகைத்துச் சிலிர்க்கும் காற்றின் வருடலில் தேங்கிக்கிடக்கிறது
ஒரு யுகக்கனவு
* தேராவில் துயிலும் இல்லம் தாண்டிப் பயணிக்கும் பாதையில் வீதியின் இருபுறமும் உள்ள தேக்கு வனம் .
- தனியிரவு
இரவுகள் எப்போதும் சபிக்கப்பட்டவை
இரவுகளில் தான் நகரத்தொடங்குகின்றன
துயரமெனும் நாகங்கள்
இரவுகளில் தான்
மனப்புற்று கிழித்து இறக்கைகள் முளைத்துப் புற்றீசல்களைப் போல
நினைவில் பறக்கின்றன அவமானங்கள்
அமாவாசை இருளில்
இரவுப்பூச்சிகளின் மெல்லிசையில்
ஏதோ ஒன்றை யோசித்தபடியே
கழிந்து போதலே
இப்போதெல்லாம் இனிமையாகிற்று
சீக்கிரம்
வந்து விடப்போகின்ற பௌர்ணமி நிலவுக்காய் காத்திருக்கின்றன
அல்லிகளும்
அதன் பக்கத்தில் தனித்தழும்
இதயங்களும் கூட