- ஏலீ ஏலீ லாமா சபக்தானி…
கலைந்த கூடும்
இறந்த குஞ்சுகளும் சிதறிக் கிடக்கின்றன
பறவையின் வீறலுக்கு
ஆறுதல் சொல்ல ஆளில்லை
குருதியின் பெருக்கத்தில்
உருவெடுத்த குளமா?
ஊடுருவ முனைந்த கதிரொளி
பேதலித்து நிற்கிறது
கந்தகச் சாம்பல் பூசி
உறைந்த குழந்தையின் ரொட்டித்துண்டில் குருதி வழிகிறது
குருதியின் வாடைக்கு
வெறிபிடித்து அலைகின்றன
தெருநாய்கள்
குழந்தைகளைப் பறிகொடுத்த
தகப்பன்
பைத்தியமாகித் திரிகிறான்
தாகத்திற்குத் தண்ணீர் என நினைத்து
தனது குருதியையே பருகுகிறான்
காங்கிரீட் காடுகள்
தீப்பிடித்து எரிகின்றன
கரும்புகை வடிவில்
புன்னகை கசிய
நடந்து செல்கிறான் அரக்கன்
இஸ்ரேலின் மலைகளில்
தேவகுமாரனின் குரல் எதிரொலிக்கிறது
தேவனே தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்
ஏலீ ஏலீ லாமா சபக்தானி.
- அவலத்தின் துயர் நடனம்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
நடக்கும் போர்
முடிவிலியாய் நீடிக்கும்
‘வெளிச்சத்தின் குழந்தைகள்’
துடைத்தழிப்போம் என்கிறார்கள்
எங்கும் எங்கும் அவர்களின் வாய்கள்
ஊதுகுழல்கள்
காட்டுமிராண்டிகள் கையில் நவீன ஆயுதங்கள்
தொன்மை நாகரிகம் துளைத்து எடுக்கப்படுகிறது
குழந்தைகளின் நரம்புகளில் பின்னப்பட்ட யாழில்
பாலைப் பண் ஒலிக்கிறது
எரி நரகத்தின்
நெருப்பு மலர்களின்
மகரந்தம்
நகரைச் சூழ்கிறது
அவலத்தின் துயர் நடனம்
எங்கும் படிகிறது
குழந்தைகளை அரவணைத்த
தாய்களின் கால்கள்
ஓடிக்களைக்கின்றன
செவிட்டு உலகத்தை முட்டிய ஓலங்கள்
மோதி விழுகின்றன
ஓநாயும் மானும்
துரத்தலும் வேட்டையும்
மாறி மாறி நிகழ்கின்றன
பெற்றோரை இழந்த சிறுவனொருவன்
டாங்கிகள் மீது கல்லெறிகிறான்
‘தண்ணுமை’ இசைக்கப்படுகிறது.
Art Courtesy : shutterstock.com