- குறிக் களம்
கல்லாகிக்
கிடந்த தினங்களில்
உள்ளங்கை அளவில்
வரம் புனைந்த
ஓர் எலக்ட்ரான்
திரைக் குரலில்
தொடும் அசைவுகளில்
ஆர்ப்பரித்தது.
கட்டில் சருகுகளிடையே
நெளிந்து
மூளை மடிப்புகளில் ஊர்ந்து
சீறிச் சிரித்து
நீல நினைவுப் பாம்பு.
இரை உண்ட
ஞாபகத் தடத்தில்
குறி தின்றது
பொய் பசி.
- உயிர் மசகு
சில சிட்டிகைளின் சலனத்துள்
உணர்வுக் காக்கை கவிழ்த்த
கமண்டல உற்சாகச் சுனை மடியை
தேறல் கிண்ணத்தில் ஏந்திப் பருக..
தீட்டும் வண்ணங்களில்
மாய வானம் விரியும்
கண்ணுக்குள் சுற்றும்
இரகசியப் பூமி
மன நிர்வாணத் தவத்தில்
வரம் வரமாய் கற்பனைகள் ஊர்ந்து திரிய
மன மொழியில்
திருத்தல் அற்ற கவிதைகள் எழும்.
இயந்திரங்களிடையே
மசகு போல
மனிதர்க்கு வாழ்வில்
ஏதேனும் ஒரு மசகு
சிறு போதை.