- பரிமாணம்
காற்றின் ஒலியாய்
நீயும் நானும்
மொழி அறியாதவர்களும்
இசைத்துச் செல்கிறார்கள்
இன்பங்களுக்கும்
துன்பங்களுக்கும்
ஒன்றாகவே இசைக்கிறோம்
நம் கருணையை வைத்து
பிச்சை கேட்கிறார்கள்
தேநீர் குவளைகளில்
காதலை
பரிமாறிக்கொள்கிறார்கள்
நிலவு
அங்குமிங்குமாக
நடனமாடுகிறது
நம் பாடல்
பிரபஞ்சத்தில்
புதிதாக ஒன்றை
தோற்றுவிக்கிறது
இது யாருக்கானதும் அல்ல
நமக்கானதும்
- இம்சை
அவனுக்கு மீன்கள் என்றால் அலாதி விருப்பம்
எப்போதும் தன் ஓவியங்களுக்கு நீலத்தையே தீட்டிக் கொண்டிருப்பான்
அவன் கண்களில் இரண்டு குளங்களைக் கண்டடைந்தேன்
அதிலிருந்து குதிக்கும் மீன்களை
தொட்டியில் வளர்க்கத் தொடங்கினேன்
சில பொழுதுகளில் அவற்றைத் தூண்டிலால் பிடித்து விளையாடுவதும் உண்டு
மீன்கள் நன்கு வளர்ந்துவிட்டன
கண்ணில் புரை வந்துவிட்டதாக கண்ணாடி அணிந்திருக்கிறான்
இப்போதும்
மீன்கள் குதித்துக் கொண்டே
இருக்கின்றன
- வடிசல்
மழைக்காலத்தில் பறக்கும் தட்டான்களுக்கு
ஊசிப்பூச்சி என்று பெயர் வைத்திருந்தேன்
அவைகளோடு சேர்ந்து பறப்பதும்
களைத்துப்போய் மல்லிகைச் செடியில் அமர்வதுமான நாட்கள்
குலைநடுங்க வைப்பதற்கென்றே
இடியும் மின்னலும்
போட்டி போட்டுக் கொண்டு வரும்
அர்ச்சுனா அர்ச்சுனா
ஆத்தப் பத்து அரசப் பத்து
என்று சொன்னால்
இடி தூரப் போய்விடும்
என்பாள் அப்பத்தா
மழைத் தண்ணீரைப் பிடிக்க
பாத்திரங்களைத் தயார் செய்வாள்
காகிதங்களைக் கப்பலாக்கித்
தருவாள்
பொறியோடு கடலையும்
சீரகமும் மிளகாயும் சேர்த்து
வறுத்து
அதைக் கடுங்காப்பியோடு தருவாள்
பொழுதோடு வந்த மழையும்
ஒரம்பரையும் சாமானியமாப்
போகாது என்று சொலவடை சொன்ன
அப்பத்தா
மழையிடமே போய்விட்டாள்
மேகம் மஞ்சள் பூசிக் கொண்டது
Art Courtesy : deviantart.com