-
நேற்றிலிருந்து வந்த சலிப்பூட்டும் இன்று
அந்தக் காலை புத்தம் புதிதாய் இருந்தது.
மெல்லிய காற்றும் புத்துணர்ச்சியையும்
கண்டு திகைத்துவிட்டேன்.
என்ன இருக்கக் கூடும் இந்த நாளில்?
அன்று முழுவதும்
நான் அந்த அதிசயத்திற்காகக் காத்திருக்கத் துவங்கினேன்
வெறுமனே அந்த நாள் முடிந்துவிட்டது.
அடுத்த நாளும் அதிகாலை
நான் கண் விழிப்பதற்காகக் காத்திருந்தது.
நேற்று நடந்தது நினைவுக்கு வந்தது.
எதிர்பார்ப்பு விழுந்து உடைந்தது
கண்ணாடி ஜாடியைப் போல
குளிர்ந்த காற்றை அலட்சியம் செய்து
கனத்த மனதுடன் ஜன்னலருகே அமர்ந்திருந்தேன்.
பேரெழில் கொண்ட அந்த அதிகாலையில்
நான் தொலைந்து போனேன்.
-
கால்களிலிருந்து நிலத்தை விலக்கு
பறவைகள் பறந்த பாதையின் பிரகாசம்
நிமிடங்களில் மங்கி மறைந்தது
அவை வசந்தகாலத்தை நோக்கிச் சென்றிருக்கலாம்
வசந்த காலத்தின் மீது சூரியன் எரிகிறது
அந்தப் பாதையில் கடல்களும்
பாலைவனங்களும் காடுகளும் இருந்தன
ஐந்து நிலங்களைக் கடந்து சென்றபின்
கால்கள் எங்கே நிற்க முடியும்?
நீ ஏன் எல்லாவற்றையும்
கடந்து செல்ல முயல்கிறாய்
அந்தப் பறவைகளைப் போல
இந்த நிலங்களைக் கொஞ்சம் விலக்கி வை
-
தலைச்சுமை
பெருஞ்சுமையில் தள்ளாடும் தலையில்
கொஞ்சம் மலர் சூடலாம்
மாலையிடலாம்
குளிர்ந்த நீரை ஊற்றி
கவனத்தைத் திருப்பலாம்
அந்தச் சுமையை நீங்கள் வாங்கிக்கொள்ள முடியாது
அந்தத் தலைக்கு மேல் ஒன்றுமில்லை
சுமையாயிருப்பது தலைதான்.
-
திருப்பம்
அது எல்லாவற்றையும் உள்ளே இழுத்துக் கொண்டது
தடுமாறியது போராடியது
வீழ்ச்சியை நோக்கி இழுக்கப்பட்டது
பிடியை நழுவவிட்டதும்
அது கீழே விழுவதற்குப் பதிலாக
வானில் பறந்தது
- காட்டு நிலம்
பருவமழை தவறாமல் பெய்கிறது
சூரியவெளிச்சம் நன்றாக இருக்கிறது
நிலம் பண்பட்டிருக்கிறது
விதைகள் சீராக விழுகின்றன
என்றாலும் அங்கே
இருளடர்ந்த காடுகள் தான் வளர்கின்றன