cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 25 கவிதைகள்

கடிகாரக்குருவிகள் இரண்டு


காலம் கனிந்து தொங்குகிறது

அப்பழத்தில் ஊரும் எறும்பின் மேல்

அவள் ஏறி வருகிறாள்

அவளை தொடர்ந்து

நானும் ஊர்ந்து வருகிறேன்

அவள் வெள்ளி நிறத்தில் மினுமினுக்கிறாள்

அவள் சவாரி செய்யும் எறும்புக்குக் கொம்புகள் முளைக்கின்றன

அவள் தங்க நிறத்தில் தகதகக்கிறாள்

அவள் சவாரி செய்யும் எறும்புக்கு

இறக்கைகள் முளைக்கின்றன

அவ்வெறும்பு பறந்து செல்கிறது

உயர

உயர

உயர

அவள் வைரம் போல மிளிர்ந்து ஒளிர்கிறாள்

நான்

அவ்வொளியில் திகைத்து உறைகிறேன்

அதே காலத்தில்

விண்ணிலிருந்து பனித்துகள்களாக விழும் அவள்

என் மேல் மென்மையாகக் கவிகிறாள்

அணு அணுவாக

அணு அணுவாக

நானும் ஒளிர்கிறேன்

The stars

 almost too many of them to be true

came forward so brightly

 that it was as if

they were falling with the swiftness of the void

எனும் Snow Country வரிகளின் மேல்

அகாலம் கனிந்து  தொங்குகிறது

அதில் ஊரும் எறும்பை

 கைகளை நீட்டிப் பிடித்து

வாயில் போட்டுத் தின்கிறேன் நான்

என்னை நாவை நீட்டிப் பிடித்து

வாய்க்குள் போட்டு

தின்கிறாள் அவள்

அவளை

கொடுக்குகளை நீட்டிப் பிடித்து

குத்தி குதறித் தின்கிறாள் அவளது அம்மா

அவளது அம்மாவை

ஆக்ட்டோபஸ் கரங்களை நீட்டி

வளைத்து பிடித்துத் தின்கிறான்

எண்குணத்தான்

எண்குணத்தானை

மூன்றாம் கண்ணைத் திறந்து எரிக்கிறான்

சிவன்

சிவனின் மென்னியை இறுகப் பற்றி நெருக்குகிறாள்

பார்வதி

பார்வதியின் பிடி இறுக இறுக

சிவனின் தலையிலிருக்கும் கங்கையிலிருந்து

பொங்கி பொங்கி வழிகிறது

நீர்

வெந்நீர்

செந்நீர்

நெடுஞ்சாலையின் பேருந்து நிறுத்தத்துக்கு

அருகிலிருக்கும்  டீக்கடைக்குள்

போஸ்ட்டரில் மிளிரும்

நீலப்பச்சைநிறப் பேரழகியின்

குறுநகையை ஒட்டி  அச்சேறியிருக்கும்

Female of the Species is

More Deadly than the male

எனும் வசனத்தின் மேல்


About the author

பா.சரவணன்

பா.சரவணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website